மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)

ak
அடைக்கலக் காதை

 
 

13.தானத்தின் சிறப்பு

ak13

மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக்,
காதற் குரங்கு கடைநா ளெய்தவும், 175

தானஞ் செய்வுழி,அதற்கொரு கூறு
தீதறு கென்றே செய்தன ளாதலின்,
மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள்,
உத்தர- கௌத்தற் கொருமக னாகி,
உருவினும்,திருவினும்,உணர்வினுந் தோன்றிப் 180

பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு
எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு,
விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின்,
பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம்
தற்காத் தளித்தோள் தானச் சிறப்பெனப் 185

பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை
கொண்டொரு பாகத்துக்,கொள்கையிற் புணர்ந்த
சாயலன் மனைவி தானந் தன்னால்
ஆயினன் இவ்வடிவு; அறிமி னோ’ எனச்
சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத் 190

தேவ குமரன் தோன்றினன்”, என்றலும்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
ஆரணங் காக அறந்தலைப் பட்டோர்
அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும்
தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும், 195

இட்ட தானத் தெட்டியும் மனைவியும்
முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர்,
கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு
நீட்டித் திராது நீபோ” என்றே
கவுந்தி கூற

“பெரியவர் கூறியதைப் போலக் குரங்கை தன் குழந்தை போலப் பாதுகாத்து வந்தாள் சாயலன் மனைவி.சில நாட்களுக்குப் பிறகு அந்தக் குரங்கு இறந்து போனது.அது இறந்த பிறகும்,அவள் தானம் செய்யும் போதெல்லாம்,அந்தக் குரங்கிற்கு ஒரு பங்கை ஒதுக்கி,”அதன் தீய பிறவி ஒழிய வேண்டும்”,என்று வேண்டி வந்தாள்.அவள் வேண்டுதலின் விளைவாக,அந்தக் குரங்கு மத்தியதேசத்தில் உள்ள வாரணாசி என்னும் நகரிலிருந்த ‘உத்தர கௌத்தன்’ என்பவருக்கு உயர்ந்த பண்புடைய மகனாகப் பிறந்தது.

அப்படிப் பிறந்த அவன்,அழகு,அறிவு,செல்வம் ஆகியவற்றில் சிறந்து விளங்கி,சிறந்த தானங்கள் பலவும் செய்து வாழ்ந்து வந்தான்.தன் முப்பத்தியிரண்டாம் வயதில் இறந்து,தேவர் வடிவம் பெற்றான்.அவன் பெற்ற செல்வத்தின் பெரும் பயன் அனைத்தும் அவனைப் பாதுகாத்து வளர்த்து,தானம் செய்த சாயலன் மனைவியினால்தான் தான் நிகழ்ந்தது.அந்த நன்றிக்கடனை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில்,தன் கையைக் குரங்கின் கையாகக் கொண்டு பிறந்தான்”,என்று அங்கு தேவமகன் வந்த காரணத்தைக் கூறினார் சமண முனிவர்.

அந்தத் தகுதிவாய்ந்த அறவுரைகளைக் கேட்ட,அந்நகரத்தில் வாழ்ந்த அருந்தவம் செய்தவர்களும்,தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் உலக நோன்பிகளும்,தானங்கள் பல செய்து வாழ்ந்து வந்த சாயலனும் அவன் மனைவியும்,இதன் பயனாக நிறைந்த இன்பம் வழங்கும் மோட்சத்தை அடைந்தார்கள்.“தானத்தின் சிறப்பினை உணர்ந்து.நான் சொல்வதை நீயும் கேட்பாய் என்றால்,அடர்த்தியான கூந்தலையுடைய கண்ணகியை அழைத்துக் கொண்டு மேலும் காலம் தாழ்த்தாமல் நீ செல்ல வேண்டும்”,என்று மாதரியிடம் உரைத்தார் கவுந்தியடிகள்.

குறிப்பு

 1. மிக்கோன்-பெரியவர்
 2. செய்வுழி-செய்யும் பாதை
 3. பெருவிறல்-மிகுந்த சிறப்பு (விறல்-சிறப்பு )
 4. புணர்ந்த-கூடிய
 5. வாரணம்-வாரணாசி
 6. எண்ணால்-8*4=32 முப்பத்தியிரண்டு (எண்-எட்டு நால்-நான்கு)
 7. அறிமினோ-அறியுங்கள்
 8. சாவகர்-உலக நோன்பிகள்
 9. சாரணர்-சமணத்துறவி
 10. தகைசால்-தகுதி மிக்க (தகை-தகுதி சால்-மிகுந்த)
 11. ஆர்-அரிய
 12. அணங்கு-தெய்வம்
 13. அறந்தலை-அறத்தை தலைப் போல நினைத்து
 14. பதி-நகர்
 15. தன்தெறல் வாழ்க்கை-தன்னலம் பேணாது பிறருக்காக வாழும் வாழ்க்கை
  (தெறல்-அழித்தல்).
 16. முட்டா-முட்டுப்பாட்டில்லாத,குறைவில்லாத

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம், சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>