மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

kklogo
கொலைக்களக் காதை

 

6.கோவலனின் நெஞ்சம்

kk6

உண்டினி திருந்த உயர்பே ராளற்கு
அம்மென் திரையலோ டடைக்கா யீத்த 55
மையீ ரோதியை வருகெனப் பொருந்திக்,

“கல்லதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென,
வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி,
எம்முது குரவர் என்னுற் றனர்கொல்? 60
மாயங் கொல்லோ? வல்வினை கொல்லோ?
யானுளங் கலங்கி யாவதும் அறியேன்;

வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழி கோட்டி,நெடுநகை புக்குப்,
பொச்சாப் புண்டு,பொருளுரை யாளர் 65
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ?
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன்;
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென 70

நல்லபடியாக உணவு சாப்பிட்டு முடித்த பின்,பெருமை வாய்ந்த கோவலனுக்கு,கருமையான குளிர்ந்த கூந்தலையுடைய கண்ணகி வெற்றிலை பாக்கு தந்தாள்.கோவலன் அவளைத் தன்னிடம் நெருங்கி வருமாறு அழைத்தான்.அவள் வந்தவுடன்,அவளை அணைத்து,தன் உள்ளம் திறந்து பேசத் தொடங்கினான்.

“உன் மெல்லிய பாதங்கள்,பெரிய கற்கள் நிறைந்த அரிய காட்டு வழியில் நடப்பதற்குத் தேவையான சிறிதளவு வலிமையும் உடையது அல்லவே !”,என்று உக்கிரமான மறவர்களின் மனைகள் நிறைந்த ஆபத்தான வழியில் கண்ணகி நடந்து வந்ததை நினைத்து இரக்கம் கொண்டான்.”நம் வயதான பெற்றோர் எப்படி வருந்தினார்களோ?நான் கண்டது கனவு என்னும் மாயையா ?அல்லது இது நனவு என்றால்,நான்  முன் செய்த தீவினையின் பயனா? என் உள்ளம் கலங்குமாறு இப்படி எதையும் யோசிக்காமல் செய்து விட்டேனே !

நான் முன்பு பயனில்லாத வெட்டி பேச்சு பேசி நேரத்தை வீணடிப்பவர்களுடனும்,புதிய புதிய விலைமகள்களைத் தேடும் காமுகரோடும் கூடித் திரிந்தேன்.இதனால் அனைவரும் என்னை இழிவாகப் பேசி ஏளனமாகச் சிரிக்கும் நிலைக்கு ஆளானேன்.இப்படி பொருள் நிறைந்த,பெரியவர்கள் விரும்பும் அறிவுரையைக் கேட்காமல்,நல்லதை செய்ய மறந்து நல்லொழுக்கத்தைக் கைவிட்டேன்.இனி எனக்கு நற்கதி உண்டா?அது மட்டுமல்லாமல் என் தாய் தந்தையர்க்குச் செய்ய வேண்டிய  பணிவிடையும் செய்யத் தவறினேன்.இந்த சிறு வயதிலும் பெரிய அறிவுடைய உனக்குத் தீங்கு விளைவித்தேன்.நம் நகரத்தை விட்டு இங்கு வருவதால் வரும் இன்னல்களை நான் உணரவில்லை.நீயும் நான் செய்த எதையும் ஆராய்ந்து பார்க்காமல் ‘மதுரைக்குப் புறப்படு’ என்றதும் புறப்பட்டுவிட்டாயே! எனக்காக என்ன அரிய காரியம் செய்துவிட்டாய்?!”என்று கண்ணகியிடம் கோவலன் மனம் இரங்கிக் கூறினான்.

குறிப்பு

 1. பேராளர்-பெருமை உடையவர்
 2. மென்-மெல்லிய
 3. திரையல்-வெற்றிலை
 4. அடைக்காய்-பாக்கு
 5. ஈத்த-தந்த
 6. ஓதி-கூந்தல்
 7. மையீர்-கரிய குளிர்ந்த ( மை-கரிய ஈர்-குளிர்ந்த)
 8. கல்லதர்-கற்கள் நிறைந்த வழி (அதர்-வழி )
 9. அத்தம்-அரிய வழி
 10. வல்லுந-வலிமை
 11. வெம்முனை-வலிமையான முனை
 12. அருஞ்சுரம்-அரிய காடு ( சுரம்-காடு )
 13. முனை-மறவர் இருப்புக்கள்
 14. எம்-எங்கள்
 15. முது-முதியவர்,வயதான
 16. கொல்-வருத்தம்
 17. குரவர்-தாய்,தந்தை அல்லது பெரியவர்கள்
 18. உளம்-உள்ளம்
 19. மாயம்-கனவு.
 20. வல்வினை-வலிதான முன்வினை
 21. யாவதும்-சிறிதும்
 22. வறுமொழி-பயனற்ற சொல் (வறு-பயனற்ற மொழி-சொல்)
 23. வம்-புதிய
 24. பரத்தை-விலைமகள்
 25. குறுமொழி-பிறரை பழிதூற்றும் சின்ன சொற்கள்
 26. கோட்டி-கூட்டம்
 27. நெடு-மிக்க
 28. பொச்சாப்பு-மறதி
 29. நச்சு-நச்சப்படும் பொருள்.
 30. ஏவல்-வேலை,கட்டளை
 31. ஏவல் பிழைத்தல் – தாய் தந்தையர்க்குச் செய்ய வேண்டியவற்றை தவிர்தல்
 32. சிறுமை-தீமை
 33. வழு-குற்றம்
 34. மருங்கு -பக்கம்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>