மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

kklogo
கொலைக்களக் காதை

 

 

9.பொற்கொல்லனை சந்தித்தான்
kk9

இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான், 100
தன்குலம் அறியுந் தகுதியன் றாதலின்
தாதெரு மன்றந் தானுடன் கழிந்து,
மாதர் வீதி மறுகிடை நடந்து,
பீடிகைத் தெருவிற் பெயர்வோன்

-ஆங்கண்
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய 105
நுண்வினைக் கொல்லர், நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்
கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித்,
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவனெனப் பொருந்திக், 110
‘காவலன் றேவிக் காவதோர் காற்கணி
நீவிலை யிடுதற் காதி யோ’,என

கழுத்திற்கும் முதுகிற்கும் இடையே பருத்து உயர்ந்து திரண்ட கொண்டை போன்ற “இமில்” என்னும் உறுப்பையுடைய எருது ஒன்று கோவலன் முன் வந்தது.அவன் அதைக் கெட்ட சகுனமாகக் கருதவில்லை.அதற்கும் அவன் குலப்பெருமை உணரும் அறிவில்லை.அதனால் அதை பொருட்படுத்தாமல்,பூந்தாதுக்கள் துகளாகி கிடக்கும் மன்றத்தை கடந்து,கோயில் பணிப்பெண்கள் வாழும் தெருவழியாக நடந்து,கடைவீதி வழியாகச் சென்றான்.

அப்போது,கண்கவரும் நுட்பமான வேலைப்பாடுகளில் சிறந்தவரான,கைத்தொழிலில் நிறைந்த திறமையுடைய,நுட்பமான தொழில் திறமை வாய்ந்த பொற்கொல்லர் நூற்றுக்கணக்கானவர்கள் தன் பின் வந்துக் கொண்டிருந்ததைக் கண்டான்.அவர்களுள் ‘மெய்ப்பை’ என்னும் சட்டை அணிந்தவனாக,ஒதுங்கி நடக்கும் நடையுடன்,கையில் கோலுடன் வரும் ஒரு பொற்கொல்லனைக் கண்டான்.

“பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயரைத் தன் பெயரில் சேர்த்துக் கொள்ளும் சிறப்பு பெற்ற,அரண்மனையைச் சேர்ந்த பொன் வேலை செய்யும் பொற்கொல்லர் இவர்”,எனக் கருதினான்.அதனால் அவனருகே சென்று,”காவலனான பாண்டிய மன்னரின் மனைவிக்கு பொருத்தமான,காலுக்குரிய அணிகலனை,நீ விற்றுத் தர முடியுமா?”, எனக் கேட்டான்

குறிப்பு

 1. இமில்-கொண்டை,திமில்,எருதின் கழுத்திற்கும் முதுகிற்கும் பருத்து உயர்ந்து திரண்ட ஒரு உறுப்பு
 2. ஏறு-எருது
 3. தாதெருமன்றம்-எருக்கள் துகளாகிக் கிடக்கும் இடம்,பூந்தாதுக்கள் நாள்தோறும் உதிர்ந்து எருவாகி கிடக்கும் மன்றம்
 4. மறுகு-தெரு
 5. மறுகிடை
 6. பீடிகை-கடைவீதி
 7. கண்ணுள் வினைஞர்-உருக்குத் தட்டார்
 8. கைவினை-கைத்தொழில்
 9. நுண்வினை-நுட்பமான செயல்(நுண்-நுட்பமான,மிகத்தெளிவான வினை-செயல்)
 10. நூற்றுவர்-நூறு பெயர்
 11. மெய்ப்பை-சட்டை
 12. புக்கு-புகுந்து
 13. தென்னவன்-பாண்டியன்
 14. வினை-தொழில்
 15. காற்கு அணி-காலில் அணியும் சிலம்பு
 16. விலையிடுதல்-விற்பனைத்தொகை குறித்தல்

 

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>