மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 1)

aichlogo

ஆய்ச்சியர் குரவை

 

 

1.பள்ளியெழுச்சி முரசு 

aichk1
கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும்
நாவல் அம் தண் பொழில் மன்னர்
ஏவல் கேட்ப,பார் அரசு ஆண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில்
காலை முரசம் கனை குரல் இயம்பும்; ஆகலின்,
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம்’ என்று,
ஐயை தன் மகளைக் கூஉய்,
கடை கயிறும் மத்தும் கொண்டு,
இடை முதுமகள் வந்து தோன்றும்-மன். 1

இமய மலையின் நெற்றியில் தன் அரசின் சின்னமான கயல்மீனை முதலில் பொருத்தியவன் பாண்டிய மன்னன். அதற்குப் பக்கத்தில் உள்ள வில்லும்,புலியும் பின்னர் சேர,சோழளால் பொறிக்கப்பட்டன.

அந்தச் சேர சோழ மன்னர்களும்,”நாவலம்” என்னும் தீவிலுள்ள மற்ற அரசர்களும் பாண்டியனின் கட்டளையைக் கேட்டு அதன்படியே நடந்தார்கள்.இவ்வாறு,முத்துமாலை அணிந்த பாண்டிய மன்னன்,இந்த நிலவுலகம் முழுவதையும் தன் வெண்கொற்றக் குடையின் கீழ் ஆட்சி செய்தான்.

அன்று அவன் அரண்மனையில்,காலையில் ஒலிக்கும் பள்ளியெழுச்சி முரசு மிகவும் சத்தமாக முழங்கியது.அதனைக் கேட்ட வயதான இடையர்குல பெண்ணான மாதரிக்கு,”தனக்கு இன்று கோயிலுக்கு நெய் கொடுக்கும் முறை”,என்று நியாபகம் வந்தது.உடனே ஐயை எனப்படும் தன் மகளை அழைத்து,கடையும் கயிற்றினையும் மத்தினையும் எடுத்துக்கொண்டு வந்து தயிர்ப்பானைமுன் நின்றாள்.

குறிப்பு

 1. அயல்-அருகாமையில்,பக்கத்தில்
 2. நாவலம்-மேரு மலைக்குத் தெற்கில் உள்ள தீவு என்று சொல்லப்படுகிறது.இந்தியாவின் பழைய பெயர் நாவலம் என்றும் கூறுவர்.
 3. தண்-குளிர்ச்சி,அருள்
 4. பொழில்-சோலை
 5. பார்-உலகம்
 6. ஏவல்-கட்டளை
 7. கோயில்-அரண்மனை
  (கோ(தலைவன்)+இல்(இல்லம்))
 8. கனை-மிக்க
 9. இயம்ப-முழங்க
 10. ஆகலின்-அதனால்
 11. நெய்ம்-நெய்
 12. கூய்-கூவி,அழைத்து
 13. தோன்று-தோன்றினாள்
 14. கடைகயிறு-கடைய பயன்படுத்தபடும் கயிறு
 15. முதுமகள்-வயதான பெண்மணி

 

ஒலி வடிவில்

 

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>