மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 9)

aichlogo

ஆய்ச்சியர் குரவை

 

10.நாரதர் புறங்காத்தார்


aich10

கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்,
மதிபுரையு நறுமேனித் தம்முனேன் வலத்துளாள்,
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார் 26

மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்,
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்,
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார் 27

 

கட்டவிழ்ந்த மலர்களால் ஆன மாலையைத் தன் கூந்தலில் சூடியவள் நப்பின்னை.கதிரவனின் வட்டவடிவத்தை தன் சக்கரத்தால் மறைத்த,கடல் போன்ற நீல வண்ணம் கொண்டவன் கண்ணன்.சந்திரனின் ஓளி போன்ற வெண்ணிற மேனியை உடையவன் கண்ணனின் சகோதரனான பலராமன்.நப்பின்னை முதல் கண்ணனுக்கு இடது பக்கத்திலும்,பலராமனுக்கு வலதுபுறமாகவும் நின்றாள்.

அந்த வேளையில்,அவளுடைய தாள ஒற்றுறுப்புகளைப் புறமிருந்து காத்து நின்றவர்,பழமையான வேதங்களை அறிந்த,முறையாக நரம்பை தடவி வாசிப்பருமான நாரதர் ஆவார்.

ஆண் மயிலின் கழுத்தைப் போன்ற நீல நிறமுடைய கண்ணனும்,மிகுந்த இதழ்கள் கொண்ட வெள்ளை நிறமுடைய மலர் போன்ற மேனியுடைய கண்ணின் தமையன் பலராமனும்,நப்பின்னையும் பின்பு திரும்பி நின்றார்கள்.அப்படி நிற்கும் வேளையில்,நப்பின்னை பிராட்டி கண்ணனுக்கு வலது புறத்திலும்,பலராமனுக்கு இடதுபுறமாகவும் நின்றாள்.

இசைக்கருவி வாசிப்பவர்களுள் சிறந்தவராக,பண்ணோடு கூடிய தாளத்திற்கு ஏற்றவாறு,யாழின் நரம்புகளை உருவி வாசிக்கும் ஆற்றல் படைத்தவர் நாரதர்.அவர் அப்போது பின் கழுத்தை சாய்த்து நின்ற நப்பின்னையின் தாள உறுதியை பக்கத்தில் இருந்து காத்து நின்றார்.

குறிப்பு

 1. கதிர்-கதிரவன்
 2. திகிரி-வட்டவடிவம்
 3. இடத்து-இடப் பக்கத்தில்
 4. மதி-சந்திரன்
 5. புரை-ஒத்த
 6. வலத்து-வலப் பக்கத்தில்
 7. உலாள்-உள்ளாள்
 8. பொதி-அரும்பு
 9. பிஞ்ஞை-நப்பின்னை
 10. சீர்-தாள ஒற்ற உறுப்பு
 11. முது-பழமையான
 12. மறை-வேதம்
 13. தேர்-தேடி,ஆராய்ந்த
 14. உளர்வார்-உருவி வாசிப்பார் (உளர்-கோதி,உருவி)
 15. எருத்து-கழுத்து
 16. உறழ்-ஒத்த
 17. முனோன்-மூத்தவன்,தமையன்
 18. பயில் இதழ்-மிக்க இதழ்
 19. கயில்-பிடர்,பின் கழுத்து
 20. கோட்டிய-வளைந்த
 21. குயிலுவர்-இசைக்கருவி வாசிப்பவர்கள்
 22. கொளை-இசை

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>