மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 12)

aichlogo

ஆய்ச்சியர் குரவை

 

12.கண்ணனை நேராக நோக்கி புகழ்ந்துப் பாடுதல்

aich13

வடவரையை மத்தாக்கி,வாசுகியை நாணாக்கி,
கடல்வண்ணன்! பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே! 32

அறுபொரு ளிவனென்றே யமரர்கணந் தொழுதேத்த,
உறுபசியொன் றின்றியே யுலகடைய வுண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே! 33

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்!நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய்! மாறட்டாய் மாயமோ ?மருட்கைத்தே ! 34

 

“வடக்கில் உள்ள மலையை மத்தாக நிறுத்தி,வாசுகி என்னும் பாம்பைக் கடையும் கயிறாக்கி,நீ முன்பொருநாள் பாற்கடலைக் கடைந்தாய்!அவ்வாறு கடைந்த உன் வலிமையான கைகள்தான் யசோதைத் தாயின் கடை கயிற்றில் கட்டுண்டக் கைகளோ?தாமரை மலர் போன்ற உந்தியை உடையவனே! இது என்ன மாயம்?
என்னால் புரிந்துகொள்ள முடியாத வியப்பை தருகிறது !

“முடிவான பொருள் இவன்” என்று தேவர்கள் வணங்கிப் போற்றினார்கள்.உன்னை வருத்தும் பசி என்று ஒன்று இல்லாமல் உலகம் முழுவதையும் உண்டாய்!அவ்வாறு,உலகை உண்ட இந்த வாய்தான்,அன்று ஆய்ச்சியர் உறியில் சேமித்த வெண்ணெயை உண்ட திருவாயோ?வளமான துளசி மாலை அணிந்தவனே!இது என்ன மாயமோ?எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது!

தேவர்கள் திரண்டு வந்து போற்றும் திருமாலே!உன் சிவந்த தாமரை மலர் போன்ற பாதத்தின் இரு அடிகளால் மூவுலகையும் அளந்து,உலகின் இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே!இவ்வாறு நடந்த அடிகள்தான் பின்னர்ப் பாண்டவர்களுக்குத் தூதாக நடந்துசென்ற பாதங்களா?நரசிம்ம அவதாரமாய்ப் பகைவனை அழித்தவனே!இது என்ன மாயம்?எனக்கு மிகுந்த வியப்பை தருகிறது !”,

என்று கண்ணனை நேராக நோக்கி புகழ்ந்துப் பாடினார்கள்.

குறிப்பு

 1. வடவரை-வடக்கில் உள்ள மலை(வரை-மலை)
 2. பண்டொரு-முன்பொரு
 3. கமலம்-தாமரை
 4. கடல்வண்ணன்-கடல் போல கரிய நிறமுடைய கண்ணன்
 5. கட்டுண்கை-கட்டுப்படுதல்
 6. அறுபொருள்-அற்ற பொருள்,தீர்ந்த பொருள்
 7. அமரர்-தேவர்
 8. கணம்-கூட்டம்
 9. ஏத்த-போற்ற
 10. உறு-மிகுந்த
 11. துழாய்-துளசி
 12. மருட்கை-வியப்பு
 13. பஞ்சவர்-பாண்டவர்
 14. அட்டாய்-அழித்தாய்
 15. மாறு-பகை
 16. மடங்கல்-சிங்கம்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>