மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

uklogo
ஊர்காண் காதை

5.கோவலனை தேற்றி,வழி அனுப்பினார் கவுந்தியடிகள்.

uk4n1

தாதை ஏவலின் மாதுடன் போகி,
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ?
வல் ஆடு ஆயத்து,மண்,அரசு,இழந்து; 50

மெல்லியல்-தன்னுடன் வெங் கான் அடைந்தோன்
காதலின் பிரிந்தோன் அல்லன்: காதலி
தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள்:
அடவிக் கானகத்து ஆய்-இழை-தன்னை
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது 55

வல் வினை அன்றோ? மடந்தை-தன் பிழை எனச்
சொல்லலும் உண்டேல்,சொல்லாயோ? நீ
அனையும் அல்லை;ஆய்-இழை-தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றோ?
வருந்தாது ஏகி, மன்னவன் கூடல்; 60
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு’ என்றலும்-

“முன்பு ஒருவன்,தன் தந்தையின் ஆணைப்படி தன் மனைவியுடன் காடு சென்றான்.அங்கே மனைவியைப் பிரிந்து பெரும் துன்பம் அடைந்தான்.அவன் வேறு யாரும் இல்லை,அவன்,வேதம் அருளிய நான்முகனைப்பெற்ற திருமாலான இராமன்! அது உனக்குத் தெரியாதா ? அது அனைவரும் அறிந்த பெருங்கதை அல்லவா !

புஷ்கரனோடு சூதாட்டமான தாய விளையாட்டால்,மண்,அரசு எல்லாம் இழந்து,மென்மைத்தன்மை வாய்ந்த காதலி தமயந்தியுடன் காட்டை அடைந்தான் நளன்.பொருள் மீது கொண்ட அன்பின் காரணமாய் அவளை அவன் பிரியவில்லை.அவன் காதலி தமயந்தி,குற்றம் செய்த இழிவினை உடையவளும் அல்ல.மரங்கள் அடர்ந்த காட்டில்,இருள்நிறைந்த நடுச்சாம வேளையில்,தனியாக அவளை விட்டுச் சென்றான்.அது அவர்கள் முன்செய்த வலிய தீவினையின் செயல் அல்லவா?அது தமயந்தியின் பிழை என்று சொல்வதற்குச் சாட்சியுண்டு என்றால் அதை நீ சொல் பார்க்கலாம் !நீ அவர்களைப் போல இல்லாமல் உன் மனைவியைப் பிரியாத வாழ்க்கையினைப் பெற்று இருக்கின்றாய்!

எனவே,பாண்டிய மன்னனின் கூடல் நகரான மதுரைக்கு மனம் வருந்தாமல் புறப்படு.அங்கே சென்று,தங்குவதற்கு ஓர் இடத்தை அறிந்து கொண்டு,இங்கே விரைந்து வந்துவிடு ”

என்று தன்னிடம் வருந்தி நின்ற கோவலனை தேற்றி வழி அனுப்பினார் கவுந்தியடிகள்.

குறிப்பு

 1. தாதை-தந்தை
 2. ஏவலின்-ஏவியதால்,கட்டளை இட்டதால்
 3. மாது-பெண்
 4. போகி-போய்
 5. பயந்தோன்-பெற்றவன்
 6. வல்-சூதாடும் கருவி
 7. ஆயம்-தாயம்
 8. மெல்லியல்-மேன்மை தன்மை(மெல்-மென்மை இயல்-தன்மை)
 9. வெங்கான்- கடுமையான காடு(கான்-காடு) வெண்
 10. தீதொடு-குற்றத்தினால்
 11. படூஉம்-படுகின்ற
 12. அடவி-காடு,மரங்கள் அடர்ந்த காடு
 13. சிறுமையள்-இழிவு உடையவள்
 14. கானகம்-காடு
 15. ஆயிழை-ஆராய்ந்த அணிகலன்கள் அணிந்த பெண்
 16. யாமம்-நள்ளிரவு
 17. வல்வினை-வலிய வினை(வல்-வலிமை)
 18. அனையை-அவர்களை
 19. ஏகி-சென்று
 20. கூடல்-மதுரை
 21. பொருந்துழி -சேர்ந்து வரும் போது

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>