மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 13)

aichlogo

ஆய்ச்சியர் குரவை

 

 

13.பிறரை நோக்கி கூறுவது போலக் கண்ணனைப் புகழ்தல்

aich14

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து,
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே?
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே? 35

பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம் 
விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,
திருவடியும், கையும், திரு வாயும்,செய்ய
கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே? 36

மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க,பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே? 37

“மூன்று உலகங்களும்,உன் இரண்டு அடிகளுக்குள் முறையாக நிரம்பாத விதமாக அடக்கி முடித்தாய்.அவ்வாறு தாவிய சிவந்த பாதங்கள் மேலும் சிவக்குமாறு,தம்பியான இலக்குவனோடு காட்டிற்குச் சென்றாய்.‘சோ’ என்னும் கோட்டையையும்,அதனுள்ளே இருந்த அரக்கர்களையும் அழிந்து போகச் செய்தவன்.பழமையான இலங்கை நகரின் காவலையும் அழித்தவன்.இத்தகையச் சிறப்புடைய வீரனான திருமாலின் புகழையும், சிறப்பையும் கேட்காத செவியும் ஒரு செவியா?

தேவர்கள் அனைவருக்கும் பெரியவன்,மாயங்களில் வல்லவன்,உலகங்கள் அனைத்தும் படைக்கின்ற விரிந்த நாபிக் கமலத்தை உடையவன்.கண்களும்,திருவடிகளும்,கைகளும்,அழகிய வாயும் சிவந்து விளங்கும் கரிய நிறமுடையவன்.இவனைக் காணாத கண்கள் என்ன கண்களோ?கண்டபின் கண் இமைத்திடும்,கண்களும் என்ன கண்களோ?

அறியாமை கொண்ட மனதினை உடைய மாமன் கம்சன் புரிந்த வஞ்சகச் செயல்களில் இருந்து கடந்து வென்று வந்தவன். நான்கு திசைகளிலும் உள்ளவர் போற்ற,பின்தொடர்ந்து வந்த வேதங்கள் முழங்க,பாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம் தூது சென்ற ஆயக் கண்ணனைப் போற்றாத நாவும் என்ன நாவோ?‘நாராயணா’ என்று கூறாத நாவும் ஒரு நாவா?”,

என்று பிறரை நோக்கி கூறுவது போலக் கண்ணனைப் புகழ்ந்தார்கள்.

குறிப்பு

 1. ஈரடியான்-இரண்டு அடியால்
 2. முறைநிரம்பா-முறையாக முடியாமல்
 3. வகைமுடிய-அதை முடிக்க
 4. சேவடி-சிவந்த அடி
 5. சேப்ப-சிவக்க
 6. காண்-காடு
 7. போந்து-சென்று
 8. அரண்-கோட்டை
 9. தொல்-பழமை
 10. கட்டழித்த-காவலை அழித்த(கட்டு-காவல்)
 11. சீர்-புகழ்
 12. சேவகன்-வீரன்
 13. கமலம்-தாமரை
 14. உந்தி-நாபி,தொப்புள்
 15. மடம்-அறியாமை
 16. தாழும்-தங்கும்
 17. கஞ்சனார்-கம்சன்
 18. ஆரணம்-வேதம்
 19. நூற்றுவர்-நூறு பேர்,கௌரவர்
 20. ஏத்தாத-போற்றாத

வாழ்த்து

aich15

என்று, யாம்
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம்
ஆத்தலைப் பட்ட துயர் தீர்க்க! வேத்தர்
மருள,வைகல் வைகல் மாறு அட்டு,
வெற்றி விளைப்பது மன்னோ-கொற்றத்து
இடிப் படை வானவன் முடித்தலை உடைத்த
தொடித் தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே! 38

“இவ்வாறெல்லாம் கூறி,நாம் குரவைக் கூத்தில் போற்றிப் பாடிய தெய்வமான கண்ணன்,நமது பசுக்களுக்கு நேரக்கூடிய துன்பத்தைத் தீர்க்க வேண்டும் !

வெற்றி தரும் இடியைப் படையாகக் கொண்ட,இந்திரனின் தலையில் உள்ள முடியணியை உடைத்த வெற்றியையும்,தொடி என்னும் வளையணிந்த தோளினையும் உடைய தென்னவனான பாண்டியனின் குறுந்தடியால் அறையப்படும் வெற்றி முரசு,வேற்றரசர்கள் நடுங்குமாறு,நாள்தோறும் பகைவர்களை வீழ்த்தி வெற்றியைக் குவித்து விளங்கவேண்டும் “,

என்று குரவைக் கூத்தின் இறுதியில் வாழ்த்தினார்கள்.

குறிப்பு

 1. என்றியாம்-என்று நாம்
 2. கோத்த-தொடுத்த
 3. ஏத்திய-போற்றிய
 4. ஆத்தலை-பசுக்களுக்கு வந்த துன்பம் (ஆ-பசு)
 5. வைகல்-அதிகாலை
 6. கொற்றத்து-வெற்றியோடு
 7. தொடி-வளை
 8. தென்னவன்-பாண்டியன்
 9. இகு-அறை
 10. கடிப்பு-குறுந்தடி

ஆய்ச்சியர் குரவை முடிந்தது .

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>