மதுரைக் காண்டம்-துன்ப மாலை-(எளிய விளக்கம்:பகுதி 4)

tmlogo

 

துன்ப மாலை

 

4.ஏங்கி அழிவேனா?

 

tm4

இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க,
துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல், 35
மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப,
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ?

நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி,
துறை பல திறம் மூழ்கித் துயர் உறு மகளிரைப் போல்,
மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப, 40
அறன் எனும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ?

தம் உறு பெரும் கணவன் தழல் எரிஅகம் மூழ்க,
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரைப் போல்,
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப,
இம்மையும் இசை ஒரீஇ, இனைந்து, ஏங்கி, அழிவலோ? 45’

 

“தன்னோடு கூடி இன்பமாக வாழ்ந்த கணவன் மடிந்து துன்பம் செய்யும் நெருப்பின் மீது மூழ்கும் போது,மனைவிமார்கள் அவர்களோடு தானும் நெருப்பில் விழுவார்கள்.அப்படி அவர்களோடு நெருப்பில் மூழ்காமால்,’ கைம்மை’ என்னும் விதவைகளின் நோன்பு நோற்றுத் துயரப்படும் பெண்களைப் போல,உலக மக்கள் அனைவரும் பழித்துத் தூற்றிப் பேசும் வண்ணம்,பாண்டிய மன்னன் செய்த தவறினால்,அன்பு கணவனை இழந்த நானும் அவலமாக அழிவேனா ?

மணம் கமழும் பரந்த மார்பையுடைய கணவரை இழந்து ஏங்கி,புண்ணியத் தீர்த்தங்கள் பலவற்றிலும் நீராடி துன்பப்படும் பெண்களைப் போல,தீவினையின் பயனால் கோபத்தில் தன் தன்மையில் இருந்து மாறிய செங்கோலுடைய பாண்டிய மன்னன் என் கணவருக்குத் தவறு செய்ததால்,அறக் கடவுள் என்று கூறப்படும் அறிவில்லாதவளே ! நானும் அவலத்தினால் அழிவேனா ?

தன்னை மணந்து வாழ்ந்த பெருமை மிகுந்த கணவர் சுடுகின்ற நெருப்பில் மூழ்க,தானும் அந்த நெருப்பில் விழாமல்.கைம்மை நோன்பில் கூறியபடி நீர்த்துறைகளில் நீராடும் கவலையே உருவான பெண்களைப் போல,நடு நிலைமையில் இருந்து தவறிய செங்கோலை உடைய தென்னவன் எனப்படும் பாண்டிய மன்னன் தவறு செய்ததால்,இந்தப் பிறவியில் புகழை இழந்து பழிக்கு ஆளாகி,ஏங்கி ஏங்கி நானும் அழிவேனா ?”,

என்று கதறினாள் கண்ணகி.

குறிப்பு

 1. இடர்-துன்பம்
 2. எரியகம்-தீயில்
 3. துயர்உறு-துன்பம் உற்ற
 4. மன்பதை-மக்கள் பதைப்பு ( பதை-பதைப்பு,பதட்டம் )
 5. அலர்-பழி
 6. இழைப்ப-செய்த
 7. அன்பன்-அன்பு பெற்ற காதலன்
 8. யான்-நான்
 9. அவலம்-அழுகை
 10. நறை-மணம்
 11. மலி-மிகுந்த
 12. வியன்-அகன்ற
 13. மடவோய்-அறிவில்லாதவளே
 14. எனு-என்னும்
 15. தழல்-தணல்
 16. கைம்மை -விதவையின் நிலை
 17. கூர்-மிகுந்த
 18. கவலைய மகளிர்-கவலையுடைய மகளிர்
 19. செம்மை-வளையாமை
 20. இகந்த-நீங்கிய
 21. தென்னவன்-பாண்டியன்
 22. இம்மை-இந்தப் பிறவி
 23. இசை-புகழ்
 24. ஒரீஇ-விடுத்து
 25. மறன்-கோபம்,தீவினை
 26. அறன்-அறம்
 27. மடவோய்-அறிவு இல்லாதவர்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>