மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

vklogo

வழக்குரை காதை

 

 

 

VK7

வெண்பா

அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே–பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் றேவி
கடுவினையேன் செய்வதூஉங் காண். 1

காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவும்–பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்
கூடலான் கூடாயி னான். 2

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்–வையைக்கோன்
கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர். 3

கண்ணகி கூற்று

தன் கணவனான பாண்டிய மன்னன் இறந்தவுடன் அவன் உடனே இறந்த கோப்பெருந்தேவியை நோக்கி,’அறம் இல்லாத பாவச்செயல்களைச் செய்தவர்களுக்கு அறமே எமனாய் நின்று தண்டனை வழங்கும் என்று அறிஞர்கள் கூறுவது பயனற்றது இல்லை.பொல்லாத தீயச் செயல்களைச் செய்த வெற்றி பொருந்திய மன்னனின் தேவியே ! கொடிய வினை உடையவளாகிய நான் செய்யப் போகும் மற்ற செயல்களையும் இனி காண்பாயாக!’,என்று கண்ணகி கூறினாள்.

கண்டவர்கள் கூற்று

‘கண்ணகியின் மலர்விழிகளில் வழியும் கண்ணீரையும்,அவள் கையில் உள்ள ஒற்றைச் சிலம்பையும்,உயிர் நீங்கியதை போலத் தோற்றமளித்த அவள் உடம்பையும்,காடு போல் பரந்து உடல் முழுதும் விரிந்து கிடக்கும் அவள் கருங்கூந்தலையும் கண்ட கூடல் எனப்படும் மதுரை நகரின் அரசன் அஞ்சினான்.தானே அவள் நிலைக்குக் காரணமாக ஆனதை கண்டு அஞ்சி உயிர் துறந்து,வெறும் உயிரற்ற உடலாய் ஆகி விட்டான்!

உடலில் படிந்த புழுதியும்,விரிக்கப்பட்ட கருமை நிற கூந்தலும்,கையில் ஒற்றைச் சிலம்பும்,கண்ணீரையும்,வைகையை ஆண்ட மன்னன் கண்டவுடன் தன் ஆற்றலை இழந்தான்.அந்தப் பெண்ணின் சொற்களை அவன் செவியில் கேட்டதுமே தன் உயிரை இழந்துவிட்டான்!’,எனப் பாண்டிய மன்னன் இறந்ததை எண்ணி மக்கள் பேசிக் கொண்டார்கள்.

குறிப்பு

 1. அல்லவை-தீயவை
 2. அறங்கூற்றம்-அறக்கடவுள்
 3. பல்லவையோர்-பல அவையோர்
 4. பழுது-பொய்ம்மை
 5. வடுவினை-தீவினை
 6. வய-வெற்றி
 7. கடுவினை-கடுமையான வினை (கடு-கடுமை)
 8. காவி-கருங்குவளை மலர்
 9. உகு-உதிர்,சொரி,சிந்து
 10. குழல்-கூந்தல்
 11. கூடலான்-கூடல் நகரமான மதுரையின் மன்னன்
 12. கூடாயினான்-உயிர் விட்டான்
 13. பாவியேன்-பாவம் செய்தவன்
 14. கோன்-அரசன்
 15. காரிகை-பெண்

வழக்குரை காதை முடிந்தது

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

 1. Barani says:

  Is it available as printed book

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>