மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

apklogoஅழற்படு காதை

15.மதுராபதிAPK9

காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று,
ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து,
மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும்,
இயங்கலும் இயங்கும்,மயங்கலும் மயங்கும்,
ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் 155
கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதியென்.

கணவனை இழந்து பிரிவுத் துயரால் உள்ளம் கொதித்து,கொல்லன் உலையில் ஊதும் துருத்தி போலச் சூடாகப் பெருமூச்சு விட்டாள் கண்ணகி.அப்படி மூச்சு வாங்கியவளாகத் தெருக்களில் கால் போன இடங்களில் எல்லாம் சுழன்று திரிந்தாள்.குறுந்தெருக்களில் கவலையுடன் நின்றாள்.சில நேரம் நடந்து கொண்டே இருந்தாள்,சில நேரம் மயங்கி செயலிழந்து நின்றாள்.இப்படி பெரும் துன்பம் அடைந்த வீரபத்தினியின் முன்,கொத்துக் கொத்தாகப் பற்றி எரிந்த தீயின் வெப்பத்தைப் பொறுக்க முடியாமல் “மதுராபதி” என்னும் மதுரையின் பெரிய தெய்வம் வந்து தோன்றினாள்.

குறிப்பு

 1. உளம்-உள்ளம்
 2. கனன்று-கொதித்து
 3. உலைக் குருகின்-கொல்லன் உலைக்களத்தில் உள்ள துருத்தி
 4. உயிர்த்தனள்-மூச்சு வாங்கினாள்
 5. உயிர்த்து-மூச்சு வாங்கி,மூச்செறித்து
 6. மறுகிடை-வீதியில்
 7. மறுகு-தெரு
 8. கவல்-மண வருத்தம்
 9. ஆர்-பொருந்திய,மிக்க
 10. அஞர்-துயரம்
 11. கொந்து-கொத்து,திரண்டு
 12. அழல்-நெருப்பு
 13. கூர்-மிகுந்த
 14. பொறாஅள்-பொறுக்காதவள்

வெண்பா

மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த
கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள்- நாம
முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள்
மதுரா பதியென்னு மாது.

மாமகளான லட்சுமி,நாமகளான சரஸ்வதி,மகிஷாசுரன் என்னும் பெரிய அசுரனை கொன்ற கோமகளான பார்வதி ஆகிய அனைவரையும் ஒன்று சேர்த்துப் படைத்தது போல வெற்றி உடையவளும்,அச்சத்தைத் தரும் மார்பின் முலையைப் பிடுங்கிய வீரபத்தினியான கண்ணகியின் எதிரே,”மதுராபதி” என்னும் தேவ மங்கை தோன்றினாள்!

குறிப்பு

 1. மாமகள்-திருமகள்,லட்சுமி
 2. நாமகள்-கலைமகள்,சரஸ்வதி
 3. செற்று-கொன்று
 4. மா-பெரிய,கருமை
 5. மயிடன்-மகிஷாசுரன்
 6. கோமகள்-அரசி,தலைவி,மலைமகள்,பார்வதி
 7. கொற்றத்தாள்-வெற்றி உடையவள்(கொற்றம்-வெற்றி)
 8. மாது-பெண்

அழற்படு காதை முடிந்தது

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

 1. குமரன் says:

  வணக்கம்.

  இந்த வலைதளத்தை உருவாக்கி பராமரிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

  ஒவ்வொரு பாடலுக்கும் சொல்விளக்கம் மற்றும் பாடல் விளக்கம் தந்து இருப்பது புதிய சொற்களை கற்க உதவுகிறது..

  படங்கள் , காணொளி கற்பவருக்கு உதவி செய்கிறது

  உங்கள் தமிழ் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

  வாழ்க.
  நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>