மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

APK9கட்டுரை காதை

1.மதுராபதித் தெய்வம்kak1

சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக்,
குவளை உண்கண் தவளவாள் முகத்தி;
கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி;
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி,
இடமருங் கிருண்ட நீல மாயினும், 5
வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்;
இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும்,
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்;
வலக்கால் புனைகழல் கட்டினும்.இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள்;பனித்துறைக் 10
கொற்கைக் கொண்கன்,குமரித் துறைவன்,
பொற்கோட்டு வரம்பன்,பொதியிற் பொருப்பன்,
குலமுதற் கிழத்தி;ஆதலின் அலமந்து,
ஒருமுலை குறைத்த திருமா பத்தினி,
அலமரு திருமுகத் தாயிழை நங்கை-தன் 15
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கையென் குறையென

தன் சடையில் இளம்பிறை அணிந்த தலையும்,குவளை மலர் போல மை தீட்டிய கண்களும்,வெள்ளை நிறமுடைய பிரகாசமான முகமும்,கடைவாய்ப் பல் வெளியே தெரியுமாறு தோன்றும் பவளம் போன்ற சிவந்த வாயும்,நிலவின் ஒளி விரிந்தது போன்ற முத்துப் பற்களும், இடப்பாகம் கருமையான நீல நிறமும்,வலப் பாகம் பொன் நிறமும் கொண்ட மேனியும் உடையவள்.இடது கையில் பொன்னிறமாக மலர்ந்த தாமரை மலரை ஏந்தியிருந்தாலும்,வலது கையில் அழகிய பிரகாசமான கொடுவாள் ஏந்தியிருப்பவள்.வலது காலில் வேலைப்பாடுடைய வீரக் கழலைக் கட்டினாலும்,இடதுக்காலில் ஒற்றைச் சிலம்பு ஒலி எழுப்பும் தன்மை உடையவள்.கொற்கை நகரின் தலைவனும்,குமரித் துறைக்கு உரிமை உடையவனும்,வட இமயத்தையே தன் ஆட்சிப் பரப்பின் எல்லையாக உடையவனும்,பொதிய மலைக்கு உரிமை உடையவனும் ஆனவன் பாண்டியன்.இத்தகைய பெருமைகள் உடைய பாண்டியனின் குலத்தில் முதல் உரிமையுடைய குலதெய்வம் என்பதால் மதுரை எரிந்ததைக் கண்ட மதுராபதித் தெய்வம் மனம் வருந்தினாள்.

‘தன் ஒரு மார்பைக் குறைத்துக் கொண்டவள்,அழகிய பெருமை மிகுந்தக் கற்புடைய பத்தினி,துன்பத்தால் வருந்துகின்ற முகத்தையும்,ஆராய்ந்து செய்த அணியையும் உடைய நங்கை’,என்ற தன்மைகள் உடைய கண்ணகியின் முன் தோன்றாமல் அவளின் பின்புறமாக வந்து நின்ற மதுராபதித் தெய்வம்,’பெண்ணே !உனக்கு என்ன குறை?என் பேச்சை கேட்டாள் வாழ்வாய் “,என்று மெல்லக் கூறினாள்.

குறிப்பு

 1. சென்னி-தலை
 2. உண்-பூசி
 3. தவள-வெள்ளிய,வெண்மை
 4. வாள்-ஒளி
 5. எயிறு-பல்
 6. நித்திலம்-முத்து
 7. மருங்கு-பக்கம்
 8. புரை-போன்ற
 9. பொலம்-பொன்,தங்கம்
 10. அம்-அழகிய
 11. தகைமை-தன்மை
 12. புனைகழல்-அலங்கரித்த அழகான கழல் (புனை-அழகு செய்தல்,அலங்கரித்தல் கழல்-ஆண்கள் காலில் அணிந்த அணிகலன்)
 13. கொண்கன்-தலைவன்
 14. பொற்கோட்டு-பொன்னாலான அடிப்பகுதி
 15. வரம்பன்-எல்லை உடையவன்
 16. பொருப்பன்-பொதிய மலைக்குரிய பாண்டியன்
 17. கிழத்தி-உரிமையுடையவள்
 18. அலமந்து-சுழன்று
 19. அலமரு-சுழல்,வருந்து,நடுங்கு
 20. ஆயிழை-ஆராய்ந்த அணிகலன் அணிந்த பெண்
 21. நிலையீயாள்-நில்லாள்,அவள் நிற்காமல்
 22. கேட்டிசின்-கேட்பாயாக

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>