மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

APK9கட்டுரை காதை

4.பாண்டியர் பெருமை

இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் 35
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு,
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது,
ஒல்கா உள்ளத் தோடு மாயினும்,
ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40
இழுக்கந் தாராது

நல்ல நெற்றி உடைய பெண்களின் அழகான பார்வையால்,தனக்குள் ஆசை முளைத்து,வரம்பு மீறிச் செல்லும் இளமையான யானைப் போல சிலருக்கு நெஞ்சம் செல்லும்.அது கல்வியாகிய பாகனின் கையுக்குள்ளும் அகப்படாது.ஆனால் நல்லொழுக்கத்துடன் இணைந்து விட்ட இந்தச் சிறந்த பாண்டியர் பரம்பரையில் பிறந்தவர்கள் மட்டும் அப்படி மாறி குற்றம் செய்ததில்லை.

குறிப்பு

 1. நுதல்-நெற்றி
 2. மடந்தையர்-பெண்கள்
 3. மடங்கெழு-அழகு பொருந்திய(மடம்-அழகு கெழு-பொருந்திய)
 4. திறப்புண்டு-வெளிப்பட்டு
 5. இடங்கழி-இருக்கும் இடத்தின் எல்லையைக் கடந்த (கழி-கடந்து)
 6. ஒல்கா(த)-தளராத
 7. புணர்ந்த-கூடிய,ஒன்றிய
 8. விழு-சிறந்த
 9. இழுக்கம்-குற்றம்

5.தன் கையை வெட்டிய பாண்டியன்
kak3

இதுவுங் கேட்டி
உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி,
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்,
அரைச வேலி யல்ல தியாவதும்
புரைதீர் வேலி இல்லென மொழிந்து

மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி
இன்றவ் வேலி காவா தோவெனச்
செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி,
நெஞ்சஞ் சுடுதலின்,அஞ்சி,நடுக்குற்று,
வச்சிரத் தடக்கை அமரர் கோமான் 50

உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்க மின்மை

இதையும் கேள் !

கீரந்தை என்பவன் தன் மனைவியைத் தனியாக வீட்டில் விட்டு,வெளியூர் சென்றான்.செல்லும் போது,’நம் மன்னரின் ஆட்சியில் உனக்கு எந்தத் தவறும் நடக்காது’,என்று தைரியம் கூறினான்.பாண்டிய அரசன் இதைக் கேட்டு விடுகிறான்.இதனால் மேலும் சிறப்பாக அந்த வீட்டை கண்காணித்து வந்தான்.ஒரு நாள் இரவில் அந்த வீட்டில் ஒரு ஆண் குரல் கேட்டது.கீரந்தை வெளியூரிலிருந்து திரும்பி வந்தது தெரியாத அரசன்,அவசரப்பட்டு அவர் மனைவிக்கு எந்தத் தீங்கும் நடக்காமல் அவளைப் காப்பாற்ற எண்ணி கதவைத் தட்டினான்.

அந்தச் சத்தம் கேட்ட கீரந்தை மனைவி,”பாண்டியன் ஆட்சியில் ஒரு தவறும் நிகழாது என்று சொன்னீர்களே!அரசன் ஒழுங்காகக் காவல் புரிந்தால்,இரவில் யாரோ இப்படிக் கதவைத் தட்டுவார்களா?அரசரின் காவல் என்னை பாதுகாக்க வேண்டாமா”,என்று தன் கணவனிடம் கேட்டாள்.

அவளின் சொற்கள் பழுத்த காய்ச்சிய ஆணியால் காதைச் சுடுவதுபோல பாண்டியனின் காதுகளைச் சுட்டது.அதனால் அவன் நெஞ்சமும் சுட்டது.அஞ்சி நடுங்கினான்.வச்சிரப்படை ஏந்திய பெரிய கையுடைய இந்திரன் தலையில் சூடியிருந்த பொன்னால் ஆன முடியை,பிரகாசமான சக்கரப் படையால் உடைத்த தன் கையை அப்போதே வாளால் வெட்டினான் அந்த பொற்கைப் பாண்டியன்.

இப்படி செங்கோலையும்,குறையாத வெற்றியையும் உடைய பாண்டியரின் அரச வம்சத்தில் பிறந்தவர்களுக்கு என்றும் எந்தக் குறையும் இல்லை!இதையும் நீ அறிய வேண்டும் …

குறிப்பு

 1. புதவம்-வாயில்,வாசல்
 2. கதவம்-கதவு
 3. புடைத்தனன்-குத்தினான்,தட்டினான்
 4. அரைச வேலி-அரசுக் காவல் (அரைச-அரசு)
 5. யாவதும்-யாதொன்றையும்
 6. புரைதீர்-குற்றம் தீர்ந்த,குற்றமற்ற (புரை-குற்றம்)
 7. புதவக்கதவம்-கதவில்லா வீடு
 8. வேலி-காவல்
 9. மன்றம்-அரணில்லா இல்லம்.

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>