மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

APK9கட்டுரை காதை

15.வார்த்திகன் பரிசு பெற்றார்

kak9

நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி, 115
அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென்
இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத்
தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக்,
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் 120
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே,
நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின்
மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக்
கலையமர் செல்வி கதவந் திறந்தது 125

‘தவறாக வார்த்திகன் சிறை வைக்கப்பட்டது நியாயம் இல்லை’,எனும் அறநெறியை காவலர்கள் உணரும்படி கூறி,அவனை விடுவித்தான்.மேலும்,”அறியாத காவலர்களால் நடுநிலையில் இல்லாததால் என் அரச நீதி தவறியது.நாங்கள் செய்த தவறை நீங்கள் மன்னிக்க வேண்டும்”,என்று கூறி,நீர் சூழ்ந்த வயல்கள் உடைய திருத்தங்கால் என்னும் ஊரில் இருந்த குறைவில்லாத விளைச்சல் உடைய வயலூரை வார்த்திகனுக்குக் கொடுத்தார் அரசர்.கார்த்திகையின் கணவனான வார்த்திகன் முன்,பெரிய நிலமகளான பூமியில் தன் அழகிய மார்பை தாழ்த்தி வணங்கி,அவளின் தீராத கோபத்தையும் சிறிதளவு தணித்தான்.

பாண்டிய மன்னனின் இந்த செயல்களுக்கு பிறகு கொற்றவையின் கோபம் நீங்கியது.என்றும் நிலைத்திருக்கும் தன்மை பொருந்திய கூடல் என்னும் மதுரை நகரின் மிக நீண்ட தெருவில்,மலையைப் போன்ற உயர்ந்த மாடங்கள் எங்கும் கேட்குமாறு,கலை மானை ஊர்தியாகக் கொண்ட அவளின் கோவில் கதவும் திறந்தது.

குறிப்பு

 1. நீர்த்து-நீர் அதிகமாக இருத்தல்
 2. நெடுமொழி-புகழ்மொழி
 3. அறியா-அறிவில்லாத
 4. மாக்கள்-மக்கள்
 5. முறைநிலை-முறை செய்யும் நிலை
 6. திரிந்த-வேறுபட்ட
 7. இறைமுறை-அரசநீதி
 8. நும்-உனது
 9. கடன்-கடமை
 10. தடம்-பெரிய
 11. புனல்-நீர்
 12. கழனி-வயல்
 13. தங்கால்-திருத்தங்கால்,சிவகாசிக்கு பக்கத்தில் உள்ள தெய்வத் தலம்
 14. மடங்கா-குறைவில்லாத
 15. விளையுள்-விளைச்சல்
 16. நல்கி-கொடுத்து,அளித்து
 17. முன்னர்-முன்பு
 18. திருமார்பு-அழகிய மார்பு (திரு-அழகு)
 19. இருநில(ம்)-பெரிய நிலவுலகம் (இரு-பெரிய)
 20. தணியா-நீங்காத
 21. வேட்கை-விருப்பம்
 22. கெழு-பொருந்திய
 23. கூடல்-மதுரை
 24. மறுகு-தெரு
 25. நீள்-நீண்ட,பெரிய
 26. புரை-உயர்வு
 27. எங்கணும்-எல்லா இடத்திலும்
 28. கேட்ப-கேட்க
 29. கலையமர் செல்வி-கலைமான் மேல் அமரும் செல்வியான கொற்றவை
 30. கதவம்-கதவு

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>