மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)

APK9கட்டுரை காதை

21.நெடுவேள் குன்றம்

இரவும் பகலும் மயங்கினள் கையற்று,
உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு, 185
அவல என்னாள்,அவலித்து இழிதலின்;
மிசைய என்னாள்,மிசைவைத் தேறலிற்;
கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு,
அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் 190

இரவு பகல் என்று நேரம் பார்க்காமல் மயங்கி செயலற்றவளாக,ஒலிக்கும் நீர் நிறைந்த வைகை ஆற்றின் ஒரு கரைவழியாக நடந்து கண்ணகி மேற்கு திசை நோக்கிச் சென்றாள்.அவள் மனதில் துன்பம் மேலோங்கி இருந்ததால்,நடந்து சென்ற பாதையில் இருந்த பள்ளங்களை அவள் உணரவில்லை.தன் மனதில் தன் கணவனோடு மேலுலகு சேர்வதைப் பற்றியே எண்ணி சென்றதால்,மேடு என்பதையும் எண்ணவில்லை,நடந்து கொண்டேயிருந்தாள்.

கடலின் நடுப் பகுதியை கடந்து,’கிரவுஞ்சம்’ என்னும் மலையின் நெஞ்சை பிளந்து,அந்த இடத்தில் அசுரரை வெற்றிக் கொண்டு அழித்த,ஒளிர்கின்ற இலைபோன்ற வடிவமுடைய நீண்ட வேலோலான முருகனின்,நெடுவேள் குன்றமான ‘திருச்செங்காடு’(சிலர் நெடுவேள் குன்றம் என்பது’ ‘திருச்செங்குன்று’ என்றும் கூறுகிறார்கள்) என்னும் இடத்தில் கடைசியாகத் தன் அடி வைத்து ஏறினாள்.

குறிப்பு

 1. கையற்று-செயலற்று
 2. உரவு-மிகுதி
 3. இழிதல்-இறங்குதல்
 4. வையை-வைகை
 5. அவலம்-பள்ளம்
 6. மிசை-மேடு
 7. அவலித்து இழிதல்-வருந்தி இறங்குதல் (அவலித்து-வருந்தி இழிதல்-இறங்குதல்)
 8. மிசைவைத்து ஏறல்-மேலே அடி வைத்து ஏறுதல் (மிசை-உயரம்)
 9. கழித்து-கடந்து
 10. அவுணர்-அசுரர்
 11. சுடர்-ஒளி
 12. நெடுவேல்-நீண்ட வேல்
 13. குன்றம்-சிறுமலை
 14. வயிறு-நடுயிடம்

22.வானுலகம் சென்றாள்

kak13

பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்
தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி,
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்,
தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப்,
பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி, 195
வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு
வான வூர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழற் கண்ணகி தானென். 200

மலர்ந்த வேங்கை மரத்தின் நிழலின் கீழ்,தான் தீய செயல் செய்து விட்டதாக எண்ணி ஏங்கி அழுதுகொண்டே இருந்தாள்.பதினான்கு நாட்களுக்கு பிறகு,தன் கணவனை வணங்கும் நாள் வந்ததை உணர்ந்து,அவனைப் புகழ்ந்து வாழ்த்தினாள் கண்ணகி.

அந்த இடத்தில் அமரர்களின் அரசனான இந்திரனின் சுற்றத்தாரான தேவர்கள் தோன்றிப்,பெருமைமிக்க பெண்ணான கண்ணகியின் பெரும் புகழை வாழ்த்தி,வாடாத மலர்களை மழையாக பொழிந்தார்கள்.மணம் பொருந்திய கரிய சுருண்ட கூந்தலைக் கொண்ட கண்ணகி,,பாண்டியனின் தலைநகரான மதுரையில் மறைந்த தன் கணவனான கோவலனுடன் வான ஊர்தியில் ஏறி வானுலகம் சென்றாள்.

குறிப்பு

 1. பொங்கர்-மரக்கொம்பு
 2. எழுநாள் இரட்டி-பதினான்கு நாட்கள் (7 நாள் *2=14 நாள்)
 3. பீடு-பெருமை
 4. கெழு-மிக்க
 5. மாரி-மழை
 6. அமரர்க்கரசன்-இந்திரன்
 7. தமர்-சுற்றத்தார்
 8. ஏத்த-போற்ற
 9. கான்-மணம்
 10. புரி-புரிந்த
 11. குழல்-கூந்தல்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>