வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

katchilogo1காட்சிக் காதை

4.மலை மக்களின் காணிக்கைகள்

kaatchi4b

அளந்துகடை யறியா அருங்கலம் சுமந்து,
வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து,
இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது, 35
திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல

யானைவெண் கோடும்,அகிலின் குப்பையும்,
மான்மயிர்க் கவரியும்,மதுவின் குடங்களும்,
சந்தனக் குறையும்,சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத் திரளும்,அணியரி தாரமும்,40
ஏல வல்லியும்,இருங்கறி வல்லியும்,
கூவை நூறும்,கொழுங்கொடிக் கவலையும்
தெங்கின் பழனும்,தேமாங் கனியும்,
பைங்கொடிப் படலையும்,பலவின் பழங்களும்,
காயமும்,கரும்பும்,பூமலி கொடியும்,45
கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்,
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்,
ஆளியி னணங்கும்,அரியின் குருளையும்,
வாள்வரிப் பறழும்,மதகரிக் களபமும்,
குரங்கின் குட்டியும்,குடாவடி உளியமும், 50
வரையாடு வருடையும்,மடமான் மறியும்,
காசறைக் கருவும்,மாசறு நகுலமும்,
பீலி மஞ்ஞையும்,நாவியின் பிள்ளையும்,
கானக் கோழியும்,தேன்மொழிக் கிள்ளையும்,
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு 55

பல்வேறு வளங்கள் ஒன்றுசேர்ந்து தலை மயங்கிக் கிடக்கும் சிறப்புடையது வாஞ்சியின் அரண்மனை வாசல்.அங்கே,அளிவிட முடியாத அருமையான நகைளைச் சுமந்தபடிப் பகை அரசர்கள் திரண்டு நிற்பார்கள்.மன்னனின் தரிசனம் காண முடியாமல்,பல நாள்கள்,அவர்கள் தாங்கள் கப்பமாகக் கொண்டுவந்த பொருட்களுடன் காத்திருப்பதைக் காணலாம்.அவர்களைப் போல,மலையில் வாழும் குறவர்களும்,அரசனுக்குரிய காணிக்கைப் பொருட்களுடன் வந்து நீண்ட நேரம் சேரன் செங்குட்டுவனைக் காணக் காத்து நின்றார்கள்.

“யானையின் வெள்ளை தந்தங்கள்,அகிற்கட்டைக் குவியல்,மான் மயிரால் கட்டிய சாமரை,தேன் குடங்கள்,சந்தனக் கட்டை,சிந்தூரக் கட்டி,மை தீட்டும் அஞ்சனம்,பூசிக்கொள்ளும் அழகிய அரிதாரம்,ஏலக்கொடி,கருமிளகுக் கொடி,கூவைக்கிழங்கின் பொடி,கொழுத்த ‘கவலை’ எனும் மாவலி கொடியின் கிழங்குகள்,முதிர்ந்த தேங்காய்கள்,இனிப்பான மாம்பழங்கள்,பசுமையான கொடியுடைய ‘படலை’ எனும் பச்சிலை,பலாப்பழங்கள்,காயம் எனப்படும் பூண்டு,கரும்பு,பூக்கள் நிறைந்த கொடிகள்,கொழுமையான அடிமரத்தையுடைய கழுகின் செழுமையான குலைத் தாறுகள்,பெரிய குலையுடைய மலை வாழைமரத்தின் பெரிய பழங்கள் உடைய தாறுகள்,’ஆளி,அரி’,எனும் சிங்க வகைகளின் குட்டிகள்,’வாள்வரி’ எனும் புலியின் குட்டி,மத யானைகளின் ‘களபம்’ எனும் யானை குட்டிகள்,குரங்கு குட்டிகள்,வளைந்த கால் உடைய கரடியின் குட்டிகள்,மலையில் பாய்ந்து விளையாடும் ‘வருடை’ எனும் ஒரு வகை மான் குட்டிகள்,அழகான மான் குட்டிகள்,கத்தூரி மான்குட்டி,குற்றமற்ற கீரிப்பிள்ளைகள்,தோகையுடைய மயில்கள்,’நாவி’ எனும் புனுகுப் பூனைக்குட்டி,கானக்கோழி எனும் காட்டுக்கோழி,தேன் போல இனிமையாகப் பேசும் கிளிகள்”,

இவற்றை எல்லாம் மலைமேல் வாழும் மக்கள் தங்கள் தலைமேல் வைத்து கொண்டு வந்து,திறையாகத் தருவதற்குச் சுமந்தபடியே நின்றார்கள்.

குறிப்பு

 1. கடையறியா-முடிவு அறியாத (கடை-முடிவு)
 2. அருங்கலம்-பெறுவதற்கு அரிதான நகைகள் (கலம்-ஆபரணம்,நகை)
 3. முற்றம்-வாசல்
 4. இறைமகன்-அரசன்
 5. செவ்வி-நேர்காணல்
 6. திறை-கப்பம்
 7. தெவ்வர்-பகைவர்
 8. வெண்கோடு-வெண்மையான கொம்பு
 9. கவரி-வெண்சாமரை
 10. மது-தேன்
 11. குறை-கட்டை
 12. அஞ்சனம்-ஒரு வகை மருந்து மை
 13. திரள்-கூட்டம்
 14. அணி-அழகு
 15. வல்லி-கொடி
 16. கறி-கரிய மிளகு
 17. கூவை-கூவைக் கிழங்கு
 18. நாறு-பொடி
 19. கவலை-மாவலிக் கிழங்கு
 20. தேங்கு-தென்னை(தேங்காய்) மரங்கள்
 21. பழன்-பழம்,முதிர்ந்து காய்
 22. தேம்-இனிய
 23. படலை-பச்சிலை எனும் ஒரு வகையான கொடி
 24. காயம்-வெள்ளுள்ளி,பூண்டு
 25. பூமலி-பூக்கள் அதிகமாக இருக்கும் (மலி-மிகுதி)
 26. ஆளி-ஒரு வகையான சிங்கம்
 27. அணங்கு-குட்டி
 28. அரி-ஒரு வகையான சிங்கம்
 29. குருளை-குட்டி
 30. வாள் வரி-வாள் போன்ற கோடுகள் உடைய புலி
 31. பறழ்-விலங்குகளின் குட்டிகள்
 32. மதகரி-மதம் பிடித்த ஆண் யானை
 33. களபம்-குட்டி யானை
 34. குடாவடி-வளைந்த கால்
 35. உளியம்-கரடி
 36. வரையாடு-மலையில் விளையாடும் (வரை-மலை)
 37. வருடை-மான் வகை
 38. மட-இளமை,அழகு
 39. மறி-குட்டி
 40. காசறை-கத்தூரி
 41. ஆசு-குற்றம்
 42. அறு-அற்ற
 43. நகுலம்-கீரி
 44. பீலி-மயில் தோகை
 45. மஞ்ஞை-மயில்
 46. நாவி-புழுகுப்பூனை
 47. கானக்கோழி-காட்டுக்கோழி
 48. கிள்ளை-கிளி
 49. கானம்-காடு
 50. மிசை-மீது
 51. மாக்கள்-மக்கள்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>