வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

kaalkotlogo1கால்கோட்  காதை

1.அரசபை கூடியது

அறைபறை யெழுந்தபின்,அரிமா னேந்திய
முறைமுதற் கட்டில் இறைமக னேற
ஆசான் பெருங்கணி,அருந்திற லமைச்சர்,
தானைத் தலைவர் தம்மொடு குழீஇ
மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி, 5
முன்னிய திசையின் முறைமொழி கேட்ப

செங்குட்டுவன் வடதிசைச் செல்வதை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம்,பறை ஒலி எங்கும் ஒலித்தது.அதன்பின் செங்குட்டுவன்,சிங்கம் சுமந்திருந்த,தொன்று தொட்டு முறையாக வந்த அரசு கட்டிலின் மேல் வந்து அமர்ந்தான்.

புரோகிதர்,தலைமை ஜோதிடர்,அரியத் திறமையுடைய அமைச்சர்,படைத் தலைவர் ஆகிய அனைவரும் ஒன்று கூடி,”மன்னர் மன்னா வாழ்க!”,என வாழ்த்திப் போற்றினார்கள்.பின்னர்,வடதிசைச் செல்லும் முறைகளைப் பற்றித் தங்கள் அரசர் கூறியதைக் கேட்டனர்.

குறிப்பு

 1. அறை பறை-பறை அறைந்து (அறை-ஒலி)
 2. அரிமான்-சிங்கம்
 3. முதல் கட்டில்-முதன்மையுடைய அரசு கட்டில்
 4. இறைமகன்-மன்னன்
 5. ஆசான்-புரோகிதர்
 6. பெருங்கணி-தலைமை நிமித்திகன் (கணி-நிமித்திகன்,சோதிடன்)
 7. அருந்திற லமைச்சர்-அரிய திறமையுடைய அமைச்சர்
 8. தானைத் தலைவர்-படைத் தலைவர்
 9. குழீஇ-கூடி
 10. ஏத்தி-போற்றி
 11. முன்னிய-கருதிய
 12. முறைமொழி-முறையாக உரைக்கும் சொல்

2.சேரனின் கடுங்கோபம்

kaal1

வியம்படு தானை விறலோர்க் கெல்லாம்
உயந்த்தோங்கு வெண்குடை உரவோன் கூறும்
இமையத் தாபதர் எமக்கீங் குணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி 10
நம்பா லொழிகுவ தாயி னாங்க·து
எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியுந் தரூஉம்
வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்
கடவு ளெழுதவோர் கற்கொண் டல்லது,
வறிது மீளுமென் வாய்வா ளாகில், 15
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற்
குடிநடுக் குறூஉங் கோலே னாகென

பெருமை வாய்ந்த தன் படையின் ஆற்றலுடைய ‘விறலோர்’ எனும் ஏவிய பணியைத் தலைமை ஏற்று நடத்தும் தலைவர்களுக்கு எல்லாம்,உயர்ந்து ஓங்கிய வெண்கொற்றக் குடையை உடையவனான,வலிமை மிகுந்த செங்குட்டுவன் கூறத் தொடங்கினான்,

“இமயத்தில் இருந்து வந்த முனிவர்,எனக்கு இந்த இடத்தில் அறிவித்த,முறையாக அமையாத வாழ்க்கை உடைய வடபுல அரசர்களின் பழிச் சொற்களை நீங்களும் கேட்டீர்கள்.அந்த வார்த்தைகள் நம்மிடம் மாறாமல் நிலைத்துக் கிடந்தால்,என் போன்ற மன்னர்களுக்கு அவமானத்தையே தரும்.

வடதிசையில் உள்ள அந்த மன்னர்களின் முடி அணிந்த தலைகளின் மேல்,பத்தினிக் கடவுளின் உருவம் எழுதுவதற்கு ஒரு கல்லினை ஏற்றிக் கொண்டு வருவோம்.அப்படியில்லாமல்.குறிதப்பாத என் வாள் பயன் இல்லாமல் திரும்பினால்,நெருக்கமான வீரக்கழிகளைக் கால்களில் அணிந்துச் சென்ற கொடியப் போர்க்களத்தில்,பகையரசர் நடுங்குமாறு போர் செய்யவில்லை என்றால்,நன்மை நிறைந்த நாட்டின் குடிமக்களை வருத்தும் கொடுங்கோலன் என்று,என்னை அனைவரும் இகழ்வார்கள்!”,என்றான்.

குறிப்பு

 1. வியம்படு-பெருமை வாய்ந்த (வியம்-ஏவல்,பெருமை)
 2. தானை-சேனை,படை
 3. விறலோர்-ஏவிய பணியை தலைமை ஏற்று நடத்தும் தலைவர்.
 4. உயர்ந்தோங்கு-பெருமையோடு விளங்கும்
 5. உரவோன்-உறுதி உடையவன் (உரம்-உறுதி)
 6. தாபதர்-துறவோர்,முனிவர்
 7. அரைசர்-அரசர்
 8. ஆங்கஃது-அங்கு அது (அஃது-அது)
 9. இகழ்ச்சி-அவமதிப்பு
 10. தரூஉம்-தரும்
 11. மருங்கின்-பக்கம்
 12. முடித்தலை-முடியணிந்து
 13. வறிது-பயனின்றி
 14. மீளும்-திரும்பும்
 15. வாய்வாள்-வெற்றி வாய்ந்த வாள்,குறிதப்பாத வாள்
 16. ஆகில்-ஆனால்
 17. செறிகழல்-நெருக்கமானக் கழல் (செறி-நெருக்கம்;கழல்-வீரர்கள் அணியும் காலணி)
 18. புனைந்த-அணிந்த
 19. செருவெங் கோலத்து-நேர்மையான வெப்பம் உடைய கோலத்தோடு (செரு-செவ்விய,நேர்மையான;வெம்-வெப்பம்)
 20. பயங்கெழு-நன்மை பொருந்திய (பயன்-நன்மை;கெழு-பொருந்திய)
 21. வைப்பில்-நாட்டில்
 22. குடிநடு-குடி மக்கள் நடுங்குகின்ற
 23. குறூஉம்-குத்துகின்ற
 24. கோலேன்-கொடுங்கோல் மன்னன்

dp

 - மீனாட்சி தேவராஜ்

 meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>