வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

kaalkotlogo1கால்கோட்  காதை

5.நாட்டு மக்கள் வாழ்த்தினார்கள்

kaal3

உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப்
பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப, 35
இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின்
விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு
ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்,
வெம்பரி யானை வேந்தற் கோங்கிய
கரும வினைஞரும்,கணக்கியல் வினைஞரும், 40
தரும வினைஞரும்,தந்திர வினைஞரும்,
மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்கெனப்,
பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின்
மறமிகு வாளும் மாலைவெண் குடையும்,
புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப் 45
புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
அரைசுவிளங் கவையம் முறையிற் புகுதர

‘வாளையும்;குடையையும் வடதிசை நோக்கி நகர்த்துங்கள்’,என்று சேரன் செங்குட்டுவன் ஆணையிட்டதைக் கேட்டதும்,வலிமையான இந்தப் பூமியை சுமந்திருக்கும் ஆதிசேடனாகிய பாம்பின் தலை நடுங்குமாறு,’பொருநர்’ எனும் போர்க்களத்தில் பாடும் வீரர்களின் ஆரவாரத்துடன் போர்முரசுகள் எழுந்து முழங்கின.

இரவே இல்லை என்று ஆகும்படி செய்த மணிவிளக்கின் ஒளியில் கொடிகள் படர்ந்து நெருங்கி,நரகம் போல கூட்டம் கூட்டமாக படைகள் எழுந்தன.

இவர்களுடன்,

ஐம்பெரும் குழுவினரான;

அமைச்சர்
புரோகிதர்
சேனாபதியர்
தூதுவர்
சாரணர்,

எண்பேராயித்தினரான;

கரணத்தின் திரள்கள்
வாய்க்கடை காப்போர்
நகரிமாக்கள்
படைத்தலைவர்
கிளைச்சுற்றம்
யானை ஊர்வோர்
குதிரை ஊர்வோர்
காவிதியர்
கரணத்தின் திரள்கள்,

விரைந்து செல்லும் குதிரைகளும்,யானைகளுக்கும் உடைய மன்னனுக்குச் சிறந்தர்களான;

சடங்கு செய்யும் ‘கரும வினைஞர்’
காலத்தை அறுதியிடும் ‘கணக்கியல் வினைஞர்’
அறம் கூறுபவர்களான ‘தரும வினைஞர்’
தந்திரம் செய்யும் ‘தந்திர வினைஞர்’,

ஆகிய அனைவரும்,’மண் செறிந்த இந்தப் பூமி முழுவதும் ஆள்வோனான எங்கள் மன்னன் வாழ்க!’,என வாழ்த்தி எழுந்தார்கள்.

பிடித்து வைத்த ‘பிண்டம்’ எனும் உணவு உருண்டையை உண்ணும் பெரிய யானையின் பிடரின் மீது,வெற்றி மிக்க வீரவாளையும்,மாலை அணிந்த வெண் கொற்றக் குடையையும் வைத்து,வெளிப்புறமாக இருந்த அறையில் கொண்டு சேர்த்தார்கள்.குற்றமற்ற படை எழுச்சிக்கு அடையாளப் பூவான வஞ்சி மாலையைத் தங்கள் சேரர்களுக்கு உரியப் பனம் பூமாலையுடன் தொடுத்து அணிந்தவனான சேரனுடன்,அவனது அரசில் விளங்கும் அவைமாக்களும்,முறையோடு அங்கே சென்று புகுந்தார்கள்

குறிப்பு

 1. உரவு-வலிமை
 2. அரவுத்தலை-பாம்பின் தலை (அரவு-பாம்பு)
 3. பனிப்ப-நடுங்க
 4. பொருநர்-போர் களத்தில் பறைகளை முழக்கிப் பாடியாடும் கலைஞர்
 5. ஆர்-ஆரவாரம்
 6. நிரைமணி-வரிசையான மணிகள் கட்டிய (நிரை-வரிசை)
 7. நிரயம்-நரகம்
 8. விரவு-கலப்பு
 9. தானை-சேனை,படை
 10. ஐம்பெருங் குழு-அமைச்சர்,புரோகிதர்,சேனாபதியர்,தூதுவர்,சாரணர் முதலிய ஐந்து அரசியல் சுற்றத்தார்
 11. எண்பே ராயம்-எட்டுவகை மைய குழுகரணத்தின் திரள்கள்-செயலாளர்கள்
  வாய்க்கடை காப்போர்-காப்பாளர்கள்
  நகரி மாக்கள்-ஊர்ப்பெருமக்கள்
  படைத்தலைவர்-படைத்தலைவர்கள்
  கிளைச்சுற்றம்-அணுக்கத் தொண்டர்கள்
  யானை ஊர்வோர்-யானை வீரர்கள்
  குதிரை ஊர்வோர்-குதிரை வீரர்கள்
  காவிதியர்-உழவர் பெருமக்கள்
 12. வெம்பரி-விரைந்து செல்லும்
 13. வேந்தர்-மன்னர்
 14. ஓங்கிய-சிறந்த
 15. கரும வினைஞர்-சடங்கு செய்பவர்
 16. கணக்கியல் வினைஞர்-காலக்கணிதர்
 17. தரும வினைஞர்-அறம் கூறுபவர்கள்
 18. தந்திர வினைஞர்-தந்திரம் செய்பவர்கள்
 19. மண்டிணி- மண் செறிந்த
 20. ஞாலம்-உலகம்
 21. களிற்று-யானை
 22. பிண்டம்-பிடித்த சோறு,சோற்று உருண்டை
 23. எருத்தின்-கழுத்தின் (எருத்து-கழுத்து)
 24. மறமிகு-வெற்றி மிகுந்த (மறம்-வெற்றி)
 25. புறநிலைக் கோட்டம்-வெளிப்புறம் இருக்கும் அறை (புறநிலை-வெளிப்புறம்;கோட்டம்-அறை)
 26. புரிசை-மதில்
 27. புரைதீர்-குற்றமற்ற (புரை-குற்றம் தீர்-அற்ற)
 28. போந்தை-பனை
 29. அரைசு-அரசு
 30. அவையம்-அரசபை
 31. புகுதர-புகுந்து செல்ல

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>