வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

kaalkotlogo1கால்கோட்  காதை

10.வஞ்சி நகரை விட்டு வெளியேறினான்

மாகதப் புலவரும்,வைதா ளிகரும்,
சூதரும்,நல்வலந் தோன்ற வாழ்த்த; 75
யானை வீரரும் இவுளித் தலைவரும்
வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத்
தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்
வானவன் போல,வஞ்சி நீங்கித்

உட்கார்ந்து அரசனைப் புகழும் மாகதரும்,அரசரை புகழ்ந்துப் பாடும் வைதாளிகரும்,மன்னன் முன் நின்று அவரைப் புகழும் சுதரரும்,நல்ல வெற்றியைப் பெற்று விளங்க வேண்டும் என்று சேரனை வாழ்த்தினார்கள்.யானை வீரரும்,குதிரை வீரரும்,கூர்மையான வாளை ஏந்தியப் போர் வீரர்களும்,வாளின் வெற்றியை வாழ்த்தினார்கள்.அசுரர் மீது போர் செய்வதற்காக தன்னுடைய கோ நகரில் இருந்து படை எழுச்சி செய்த,தேவசேனாதிபதியாகிய இந்திரனைப் போல,செங்குட்டுவனும் வஞ்சி நகரை விட்டு வெளியேறினான்.

குறிப்பு

 1. மாகதப் புலவர்-உட்கார்ந்து அரசனைப் புகழ்வர்கள்
 2. வைதாளிகர்-வைதாளி பாடுபவர் (வைதாளி-புகழ்ந்து பாடும் பாட்டு)
 3. சூதர்-மன்னன் முன் நின்று அவரைப் புகழ்பவர்கள்
 4. இவுளி-குதிரை
 5. வாய்வாள்-தப்பாத வாள்,வாய்த்த வாள்
 6. மறவர்-வீரர்
 7. வாள்வலன்-வெற்றி பொருந்திய வாள் (வலன்-வெற்றி)
 8. ஏத்த-போற்ற
 9. தானவர்-அசுரர்
 10. பதி-ஊர்
 11. வானவன்-இந்திரன்

11.நீலகிரி சேர்ந்தான்
kaal6

தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும் 80
வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத,
மலைமுதுகு நெளிய,நிலைநா டதர்பட,
உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு
ஆலும் புரவி யணித்தேர்த் தானையொடு
நீல கிரியின் நெடும்புறத் திறுத்தாங்கு; 85
ஆடியல் யானையும்,தேரும்,மாவும்,
பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பிற்
பாடி யிருக்கைப் பகல்வெய் யோன்றன்
இருநில மடந்தைக்குத் திருவடி யளித்தாங்கு,
அருந்திறல் மாக்கள் அடியீ டேத்தப் 90
பெரும்பே ரமளி ஏறிய பின்னர்

தண்டத் தலைவர் எனும் படைத் தலைவர்களும்,முன்னணிப் படையான தார் சேனையும்,கடலின் வெள்ளை அலைகள் அடுக்கடுக்காக வந்து கரையில் மோதுவது போல அணி அணியாகச் சென்றன.அதனால்,மலைகளின் முதுகு நெளியவும்,காடு நாடுகளில் எல்லாம் வழி உண்டாகவும்,உலகை ஆளும் சேரர் பெருமான் ஒன்றாகச் சென்று ஆடும் குதிரைகள் பூட்டிய அழகிய தேர் படையுடன்,நீலகிரி மலையின் நீண்ட வெளியிடத்தில் தங்கினான்.

வெற்றிப் பொருந்திய யானைகளும்,தேர்களும்,குதிரைகளும்,பெருமை மிகுந்த வீரர்களும் மாறாத காவல் ஏற்பாட்டுடன் கூடியக் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள்.படை வீட்டில்,நடுநிலையை விரும்பும் சேரன்,தான் ஆளும் நிலமகளுக்கு,தன் திருவடியியை அளித்துச் சிறப்பிப்பது போல இறங்கியபோது,அரிய வலிமை உடையப் படைத்தலைவர்கள் அவன் அடி எடுத்து நடந்து வந்த அழகைப் போற்றினார்கள்.

பின்னர்,பெருமைப் பொருந்திய ஒரு சிறந்த கட்டில் மேல் மன்னனும் சென்று அமர்ந்தான்.

குறிப்பு

 1. தண்டத் தலைவர்-படைத் தலைவர் (தண்டு-படை)
 2. தலை-முதன்மை
 3. தார்ச் சேனை-தூசிப் படை,முன்னணிப் படை.
 4. வெண்டலை-வெள்ளை அலை
 5. புணரி-கடற்கரை
 6. விளிம்பு-ஒரு பொருளினுடைய ஓரம்
 7. சூழ்-சூழ்ந்து
 8. அதர்-வழி
 9. பட-உண்டாக
 10. ஒருங்கு-முறை
 11. ஆலும்புரவி-ஆடும் குதிரை (ஆலும்(ஆடும்)+புரவி(குதிரை)
 12. அணி-அழகிய
 13. தானை-படை
 14. நெடும்புறத்து-நீண்ட வெளியிடத்தில் (புறம்-வெளியிடம்)
 15. இறுத்தாங்கு-தங்கி
 16. ஆடு-வெற்றி
 17. இயல்-பொருந்திய
 18. மா-குதிரை
 19. பீடுகெழு-பெருமை பொருந்திய (பீடு(பெருமை)+கெழு(பொருந்திய))
 20. மறவர்-வீரர்
 21. பிறழா-தப்பாத
 22. காப்பின்-காவலில் (காப்பு-காவல்)
 23. பாடி-படைவிட்டிருக்குமிடம்
 24. இருக்கை-இருக்குமிடம்
 25. பகல்-நடுவுநிலை
 26. வெய்யோன்-விரும்புவோன்
 27. நிலமடந்தை-பூமாதேவி
 28. அருந்திறல்-அரிய வலிமை
 29. மாக்கள்-மக்கள்
 30. அடியீடு-அடி எடுத்து நடத்தல்
 31. ஏத்த-போற்ற
 32. அமளி-காட்டில்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>