வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

kaalkotlogo1கால்கோட்  காதை

13.கூத்தர் வந்தார்கள்

kaal8

வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக் 105
கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும்
தங்குலக் கோதிய தகைசால் அணியினர்
இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி
மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர்
வடம்சுமந் தோங்கிய வளர்இள வனமுலைக் 110
கருங்கயல் நெடுங்கட் காரிகை யாரோடு,
இருங்குயில் ஆல இனவண்டு யாழ்செய,
அரும்பவிழ் வேனில் வந்தது வாரார்
காதல ரென்னும் மேதகு சிறப்பின்
மாதர்ப் பாணி வரியொடு தோன்றக் 115

‘கடல் சூழ்ந்த இந்த உலகத்தை ஆளும் சேரன் வாழ்க’,என்றுக் கூறியப்படி கொங்கண நாட்டுக் கூத்தர்,கருநாடக நாட்டுக் கூத்தர் ஆகியோர் வந்தார்கள்.

தங்கள் குலத்துக்கு எனச் சொல்லப்பட்ட தகுதி வாய்ந்த அணிகளை உடையவராக அவர்கள் விளங்கினார்கள்.இருளையே பின்னுக்குத் தள்ளுமாறு,கறுமையான இருண்டத் தலை உடையவராக அவர்கள் தோன்றினார்கள்.அதில் மயக்கும் தழைத்த மாலை பரப்பி இருந்தது.

மணிவடங்கள் சுமந்து,உயர்ந்து விளங்கும் அழகிய மார்புகளையும்,கருமையான கயல் மீன்கள் போன்ற நீண்டக் கண்களும் உடைய ஆடல் மகளிரும் அவர்களுடன் வந்திருந்தார்கள்.

‘கரியக் குயில்கள் பாடுகிறார்கள்.வண்டுகள் யாழிசை போல ஒலி எழுப்புகிறது,அரும்புகள் மலர்கின்ற இளவேனில் பருவமும் வந்தது.என் காதலர் இன்னமும் வரவில்லை!’, என்று நினைந்து எங்கும் பெரும் சிறப்பை உடைய அழகிய காதல் பாடலாகிய ‘மாதர்ப் பாணி’ எனும் வரிப்பாட்டுடன்,அவர்கள் சேரன் முன்பு ஆடிப்பாடினார்கள்.

குறிப்பு

 1. வீங்குநீர்-கடல்
 2. ஞாலம்-உலகம்
 3. குலக்கு-குலத்துக்கு
 4. தகைசால்-தகுதி மிக்க (சால்-மிகுந்த)
 5. இருள்பட-இருள் உண்டாகுமாறு
 6. பொதுளிய-நெருங்கிய
 7. இருங் குஞ்சி-கரிய முடி (குஞ்சி-ஆடவர் தலை மயிர்)
 8. மருள்-மயக்கம்
 9. ஒலியல்-தழைத்தல்
 10. மாலையர்-மாலை உடையவர்
 11. ஓங்கிய-உயர்ந்த
 12. வளர்இள-வளரும் இளைய
 13. வன(ம்)-அழகு
 14. கருங்கயல்-கருமையான கயல் மீன்
 15. நெடுங்கண்-நீண்ட கண்
 16. காரிகை-பெண்
 17. இருங்குயில்-கருமையான குயில்
 18. ஆல-ஆட
 19. அவிழ்-மலரும்
 20. மேதகு-மேன்மை பொருந்திய
 21. மாதர்ப்பாணி-காதல் பாட்டு (மாதர்-காதல்)
 22. வரி-நாடகத் தமிழ் பாடல்

14.குடகர் வந்தார்கள்

கோல்வளை மாதே! கோலங் கொள்ளாய்,
காலங் காணாய் கடிதிடித் துரறிக்
காரோ வந்தது! காதல ரேறிய
தேரோ வந்தது செய்வினை முடித்தெனக்
காஅர்க் குரவையொடு கருங்கயல் நெடுங்கட் 120
கோற்றொடி மாதரொடு குடகர் தோன்றத்

‘நெருங்கிய வளையல்கள் அணிந்த மாதரசியே!உன்னை இப்போது அலங்கரித்துக் கொள்வாயாக.காலத்தைப் பார்.கடினமாக இடித்து உருமிக் கொண்டு மேகங்கள் திரண்டு வருகின்றன.காதலர் செய்யவேண்டிய வேலைகளை முடித்த பின்னர் ஏறிய தேரும் அதோ வந்துவிட்டதைப் பார்!’,

என்ற கார் காலத்தைக் குறித்துப் பாடும் குரவைப் பாட்டுடன்,கரியக் கயல் மீன் போன்ற நீண்டக் கண்களையும்,நெருங்கிய வளையல்களையும் உடைய பெண்களுடன் குடநாட்டுக் கூத்தரும் வந்து,அவன்முன் ஆடிப்பாடிப் போற்றினார்கள்.

குறிப்பு

 1. கோல்வளை-நெருக்கமான வளையல்கள் (கோல்-திரட்சி,கூட்டம்)
 2. கடிது-கடினமாக
 3. உரறி-முழங்கி
 4. செய்வினை-செய்யும் செயல்
 5. குடகர்-குடநாட்டுக் கூத்தர்
 6. கருங்கயல்-கருமையான கயல் மீன்
 7. நெடுங்கண்-நீண்ட கண்
 8. கோற்றொடி-திரண்ட வளையல்கள் (கோல்-திரண்ட தொடி-வளையல்)

15.ஓவர்கள் வந்தார்கள்

தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து,
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
ஊழி வாழியென் றோவர் தோன்றக்
கூத்துள் படுவோன் காட்டிய முறைமையின் 125
ஏத்தின ரறியா இருங்கலன் நல்கி,
வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி

‘காண்பவர்கள் மனம் தன்னிடம் தங்கி இருப்பதற்குக் காரணமான அலங்காரங்கள் பூண்டப் பெண்களோடு,சிறப்பாக ‘வாள்வினை’ எனும் போர்த்தொழிலை நன்றாக வெற்றியுடன் முடித்து,வெற்றி வாளினை உடைய மன்னன் நீடுழி வாழ வேண்டும்!’,என்று வாழ்த்தியபடி,’ஓவர்கள்’ எனும் ஓவியர்கள் சேரன் முன்பு வந்து தோன்றினார்கள்.

தன்னிடம் இருந்த கூத்து ஆடுபவர்கள் காட்டிய முறைபடி,தன்னைப் புகழ்ந்துப் பாடி ஆடியவர்களுக்கு,அதற்கு முன் அவர்கள் அறியாத பேரணிகளை,சேரன் பரிசாக வழங்கினான்.வேறு அரசர்களை நடுங்கச் செய்யும் வேலை உடைய மன்னன் இவ்வாறு இருந்த போது ..

குறிப்பு

 1. தாழ்தல்-தங்குதல்,பொருந்துதல்
 2. தமர்-மகளிர்
 3. வாள்வினை-போர்த் தொழில்
 4. ஓவர்-ஏத்தாளர்,ஓவியர்
 5. வாள்வினை-போர் தொழில்
 6. ஊழி வாழி-நீடுழி வாழ்க (ஊழி-நீண்ட காலப்பகுதி)
 7. மறவாள்-வெற்றி வாள்
 8. ஏத்தினர்-போற்றினர்
 9. இருங்கலன்-பெரிய அணிகலன் (இரும்-பெரிய)
 10. நல்கி-கொடுத்து
 11. வேத்தினம்-பகைமன்னர்களின் இனம் (வேந்து-மன்னன்)
 12. நடுக்கும்-நடுங்கும்
 13. வேலோன்-வேல் ஏந்தியவன்
 14. இருந்துழி-இருந்தபோது (இருந்த+உழி(காலம்,இடம்)

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

 1. lara says:

  இதை pdf வடிவில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>