வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

kaalkotlogo1கால்கோட்  காதை

16.சஞ்சயன் முதலியோர் வருகை

KAAL9

நாடக மகளிர்ஈ ரைம்பத் திருவரும்,
கூடிசைக் குயிலுவர் இருநூற் றெண்மரும்,
தொண்ணூற் றறுவகைப் பாசண் டத்துறை 130
நண்ணிய நூற்றுவர் நகைவே ழம்பரும்,
கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற் றிரட்டியும்,
கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும்,
ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும்,
எய்யா வடவளத் திருபதி னாயிரம் 135
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்,
சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர்ஈ ரைஞ்ஞூற் றுவரும்
சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே!
வாயி லோரென வாயில்வந் திசைப்ப, 140

நாடக மகளிரும் நலத்தகு மாக்களும்,
கூடிசைக் குயிலுவக் கருவி யாளரும்
சஞ்சயன் றன்னொடு வருக ஈங்கெனச்
செங்கோல் வேந்தன் திருவிளங் கவையத்துச்
சஞ்சயன் புகுந்து தாழ்ந்துபல ஏத்தி 145
ஆணையிற் புகுந்தஈ ரைம்பத் திருவரொடு
மாண்வினை யாளரை வகைபெறக் காட்டி
வேற்றுமை யின்றி நின்னொடு கலந்த
நூற்றுவர் கன்னருங் கோற்றொழில் வேந்தே!
வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது 150
கடவு ளெழுதவோர் கற்கே யாயின்,
ஓங்கிய இமையத்துக் கற்கால் கொண்டு,
வீங்குநீர்க் கங்கை நீர்ப்படை செய்தாங்கு,
யாந்தரு மாற்றல மென்றன ரென்று,
வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்கென.. 155

“மிக உயர்ந்த வில் கொடியும்,செங்கோலும் உடைய மன்னனே !

நடன மங்கைகள் நூறு பேர்,கூட்டாக இசை எழுப்பும் ‘குயிலுவர்’ எனும் இசைக் கலைஞர்கள் ஆயிரத்து ஆறு நூறு பேர்,தொண்ணூற்று ஆறு வகையான ‘பாசண்டத்துறை’ எனும் சமய சாத்திரத் தருக்கக் கோவையைக் கற்றுத் தேர்ந்த சிரிப்பு வரவைக்க வல்ல ‘வேழம்பர்’ நூறு பேர்,தாமரை வடிவான பெரிய தேர் நூறு,கடுமையான மதம் பிடித்த யானை ஐந்நூறு,பத்தாயிரம் கத்திரியால் கொய்யப்பட்ட பிடரிமயிர் உடையக் குதிரைகள்,பிறர் பார்க்காத வடதிசையில் மட்டும் தோன்றுகின்ற வளமான சரக்குகளை அவற்றின் அளவும் பெயரும் குறித்த கண்ணெழுத்துக்களை உடைய மூட்டைகளை ஏற்றிய வேலைப்பாடுகள் நிறைந்த வண்டிகள் இருபதாயிரம் ஆகியவற்றுடன் சஞ்சயன் எனும் தூதர் தலைவனும், ‘தலைக்கீடு’ என்னும் அரசரளிக்கும் தலைப்பாகை,மற்றும் சட்டை அணிந்தத் தலைவர்கள் ஆயிரம் பேரும் நம் வாசலில் வந்து உள்ளார்கள்”,

என்று வாசலில் காவல் காப்பவன் வந்து கூறினான்.

அதைக் கேட்ட மன்னன்,”நடனப் பெண்களையும்,சிறப்புடைய பிறரையும்,கூடி இசை எழுப்பும் இசைக் கலைஞர்களையும்,சஞ்சயனோடும் இந்த இடத்திற்குக் கொண்டு வாருங்கள்”,என்று உத்திராவிட்டார்.

செங்கோலுடைய மன்னனின் செல்வம் பொழியும் அவைக்குச் சஞ்சயன் புகுந்தான்.தலை வணங்கி,மன்னனை பலவிதமாகப் போற்றினான்.அரசரின் கட்டளைப் பெற்றுத் தன்னோடு வந்த இருநூறு நடனப் பெண்களையும்,சிறந்த பிற தொழில் வல்லமை உடையவர்களையும் முறையாக மன்னனுக்கு அறிமுகம் செய்துவைத்தான்.

‘செங்கோல் தொழில் புரியும் அரசரே!உன்னோடு வேற்றுமை இல்லாமல் நட்புடைய நூறு கன்னர்கள் உன்னிடம் கூற ஒரு செய்தி அனுப்பி உள்ளார்கள்.

வடதிசை நோக்கிச் சேரர் தலைவர் புறப்படுவது கடவுள் வடிக்கத் தேவையான ஒரு கல்லுக்காகவே என்றால்,உயந்த இமைய மலையில் உள்ள கல்லை அடிச் செய்து,பெருகி வரும் நீரை உடையக் கங்கையில் நீராட்டித் தூய்மை செய்யும் ‘நீர்ப்படை’ செய்து,நாமே அங்கு கொண்டு தரும் ஆற்றல் உடையவர்கள்,என்பதே அந்தச் செய்தி’

என்று கூறி,’கடல் சூழ்ந்த உலகை ஆள்பவனே!நீ வாழ்வாயாக!’,எனவும் வாழ்த்தினான்.

குறிப்பு

 1. ஈரைம்பத்திருவர்-இரெண்டு(2) ஐம்பது(50)=நூறு பேர்(2*50=100) (ஈர்-ரெண்டு)
 2. கூடிசை-இசை கூடும்
 3. குயிலுவர்-இசைக்கருவி வாசிப்பவர்கள்
 4. இருநூற்றெண்மர்-இருநூற்று(2*100=200) எண்-எட்டு(8)=ஆயிரத்து ஆறு நூறு பேர் (200*8= 1600)
 5. பாசண்டத்துறை-சமய சாத்திரத் தருக்கக் கோவை
 6. நூற்றுவர்-நூறு பேர்
 7. நகைவேழம்பர்-சிரிப்பு உண்டாக்கும் வேழம்பர்
 8. கொடுஞ்சி-தாமரை
 9. நெடுந்தேர்-நீண்ட தேர்
 10. ஐம்பதிற்று இரட்டி-ஐம்பது(50) இரட்டிப்பாக(2)=நூறு(50*2=100)
 11. கடுங்களி-கடுமையான வெறி (களி-வெறி)
 12. ஓரைஞ்ஞூர்-ஒரு(1) ஐந்நூறு(500)=1*500=500
 13. ஐயீராயிரம்-ஐ-ஐந்து(5) ஈர்-இரண்டு(2) ஆயிரம்(1000) =பத்தாயிரம்(5*2*1000=10000)
 14. கொய்யுளை-கொய்யப்பட்ட பிடரிமயிர் (உளை-பிடரிமயிர்)
 15. புரவி-குதிரை
 16. எய்யா-யாரும் அறியாமல்
 17. வடவளம்-வடநாட்டில் உள்ள வளங்கள்
 18. இருபதினாயிரம்-இரு(2) பதினாயிரம்-பத்தாயிரம்(10000)=இருபதாயிரம் (2*10000=20000)
 19. கண்ணெழுத்து-சங்க காலத்தில் வழங்கிய ஒருவகை எழுத்தின் பெயர்.வெளிநாட்டு வணிகர் தங்கள் பெயர் முதலிய விவரங்களை இதில் பொறித்து வந்தனர்.
 20. கைபுனை-அணி செய்யப்பட்ட
 21. சகடம்-வண்டி
 22. தலைக்கீடு-அரசரளிக்கும் தலைப்பாகை
 23. கஞ்சுகம்-சட்டை
 24. ஈரைஞ்ஞூற்றுவர்-ஈர்(2) ஐஞ்ஞூறு-ஐந்நூறு(500)=2*500=1000 ஆயிரம் பேர்
 25. சேயுயர்-மிக உயர்ந்த
 26. வாயிலோர்-வாசல் காப்பாளர்
 27. வாயில்-வாசல்
 28. இசைப்ப-கூற
 29. நலத்தகு-நலம் பொருந்திய (தகு-தகுதி)
 30. மாக்கள்-மக்கள்
 31. திருவிளங்கு-திருமகள் அல்லது செல்வம் விளங்கும்
 32. அவையத்து-அவையில்
 33. ஏத்தி-போற்றி
 34. ஈரைம்பத் திருவர்-ஈர்(2) ஐம்பது*50) இருவர்(2)=இருநூறு(2*50*2)
 35. நூற்றுவர்-நூறு பேர்
 36. கன்னர்-வடநாட்டு மன்னர்கள்
 37. மாண்-சிறந்த
 38. வினையாளர்-தொழிலாளர்
 39. கோற்றொழில்(கோல் தொழில்)-செங்கோல் தொழில்
 40. வானவன்-சேரன்
 41. கற்கால்-கல்லை வெட்டுதல்(கால் கொள்ளுதல்-வரைந்து அடித்தெடுத்துக் கொள்ளுதல்)
 42. நீர்ப்படை-நடுகல்லிற்கு நீராட்டித் தூய்மை செய்தல்
 43. ஆற்றலம்-ஆற்றல் உடையவர்
 44. வீங்குநீர்-கடல்
 45. ஞாலம்-உலகம்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>