வஞ்சிக் காண்டம்–கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

kaalkotlogo1கால்கோட்  காதை

17.எங்கள் ஆற்றல் அறியாதவர்கள்
kaal10

அடல்வேன் மன்னர் ஆருயி ருண்ணும்
கடலந் தானைக் காவல னுரைக்கும்
பால குமரன் மக்கள்,மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்,
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி, 160
அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக்
கூற்றங் கொண்டிச் சேனை செல்வது
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன
வங்கப் பெருநிரை செய்க தாமெனச், 165
சஞ்சயன்  போனபின்

வெற்றி பொருந்திய வேல்களைக் கொண்ட பகை மன்னனின் அரிய உயிர்களைத் திண்கின்ற கடல்போன்ற படைத் திரளைக் கொண்ட காவலனான சேர மன்னன் சஞ்சயன் கூறியதைக் கேட்டு,

“பாலகுமாரனின் மக்களான கனகனும்,விஜயனும்,தன் நாவில் அடக்கம் இல்லாமல்,பிற புதிய மன்னர்களுடன் கூடி,அரியத் தமிழ் மன்னர்களின் ஆற்றலை அறிந்துக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.அவர்களுக்கு எங்கள் ஆற்றலைப் புரிய வைப்பதற்காக,இந்த சேனைப் படை எமனையும் தன்னுடன் கூட்டிச் செல்கிறது.அங்கே பெரிய ஆறான கங்கையை எங்களது பெரிய படை கடந்து,அக்கரை சேர்வதற்கான ஏராளமான ஓடங்களையும் நாங்கள் அமைத்துடுவோம் என்று அந்த நூறு கன்னர்களிடம் போய் சொல்லு’,என்று கட்டளையிட்டான்.

அந்த ஆணையை மேற்கொண்டு,சஞ்சயனும் தன் நாடு நோக்கி சென்றான்.

குறிப்பு

 1. அடல்-வெற்றி
 2. கடலந்தானை-கடல் போன்ற பெரிய தானை (தானை-படை)
 3. காவா-காவல் இல்லாமல்
 4. அருந்தமிழ்-அரிய தமிழ்
 5. அறிந்திலர்-அறியாதவர்
 6. கூற்றம்-எமன்
 7. நூற்றுவர்-நூறு பேர்
 8. கொண்டி-கொள்ளை
 9. பெருநிரை-பெரும் கூட்டம் (நிரை-கூட்டம்)

18.தென்னவர் திறை

கஞ்சுக மாக்கள்,
எஞ்சா நாவினர்,ஈரைஞ் ஞூற்றுவர்,
சந்தின் குப்பையுந் தாழ்நீர் முத்தும்
தென்ன ரிட்ட திறையொடு கொணர்ந்து,
கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன் 170
மண்ணுடை முடங்கலம் மன்னவர்க் களித்தாங்கு,
ஆங்கவ ரேகிய பின்னர்-

சொல் பிழை இல்லாத நாவன்மை உடைய,சட்டை அணிந்த ஆயிரம் பேர்,’சந்து’ எனும் சந்தனத்தின் குவியல்,ஆழ்கடல் முத்து ஆகியவற்றை தென்னவர் இட்ட திறைப் பொருளுடன் கொண்டு வந்தார்கள்.’திருமுகம் எழுதும் ‘கண்ணெழுத்தாளர்’ தங்கள் காவலுடைய மன்னனின் இலச்சினையிடப்பட்ட திருவோலையை அந்த மன்னர்களுக்குத் தாருங்கள் !’,என மன்னன் ஆணைப்படி எழுதித் தந்தவுடன் அவர்களும் தம் நாடு சென்றார்கள்.பின்னர் …

குறிப்பு

 1. கஞ்சுகம்-சட்டை,முருக்கு
 2. மாக்கள்-மக்கள்
 3. எஞ்சா-சோர்வில்லா
 4. நாவினர்-நா உடையவர்
 5. ஈரைஞ்ஞூற்றுவர்-2*5*100=ஆயிரம் பேர்
 6. சந்தின்- சந்தனத்தின் (சந்து-சந்தனம்)
 7. தாழ்நீர்-நீர் தங்கிய (தாழ்-தங்கிய)
 8. தென்னர்-பாண்டியர்
 9. கொணர்ந்து-கொண்டு வந்து
 10. கண்ணெழுத்தாளர்-திருமுகம் எழுதுபவர்கள்
 11. முடங்கல்-திருமுகம்,சாசனம்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>