வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

kaalkotlogo1கால்கோட்  காதை

19.வடதேசம் அடைந்தான்

kaal11

பின்னர்-

மன்னிய
வீங்குநீர் ஞாலம் ஆள்வோ னோங்கிய
நாடாள் செல்வர் நலவல னேத்தப்
பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து, 175
கங்கைப்பே ரியாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி
ஆங்கவ ரெதிர்கொள அந்நாடு கழித்தாங்கு
ஒங்குநீர் வேலி உத்தர மரீஇப்
பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த
தகைப்பருந் தானை மறவோன் றன்முன்

உத்தரன்,விசித்திரன்,உருத்திரன்,பைரவன்,
சித்திரன்,சிங்கன்,தனுத்தரன்,சிவேதன்,
வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம்,
தென்றமி ழாற்றல் காண்குதும் யாமெனக் 185
கலந்த கேண்மையிற் கனக விசயர்
நிலந்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர

மிகுதியான நீர் கொண்ட கடல் சூழ்ந்த உலகை ஆளும் செங்குட்டுவன்,’பெருமை மிகுந்த நாடாளும் மற்ற குறுநில மன்னர்களும் அவனுடைய சிறந்த வெற்றியைக் கொண்டாடுமாறு நீலகிரிப் படை வீட்டை விட்டுப் புறப்பட்டு.வடதிசை நோக்கிச் சென்றான்.

கங்கையின் பெரிய ஆற்றங்கரையில்,நூறு கன்னரால் உதவி பெற்ற மரக்கலத் திரள்களின் உதவியால் ஆற்றைக் கடந்து,ஆற்றின் வடகரையை அடைந்தான்.அங்கே நூறு கன்னர்கள் தன்னை எதிர்கொண்டு வரவேற்றுச் சிறப்புச் செய்தப் பின்னர் அவர்கள் நாட்டையும் கடந்தான்.அதன்பின்,மிக்க நீரை வேலியாக உடைய வடதேச நாட்டை அடைந்தான்.அதன் பின்னர்,பகை நாட்டுக்குள் புகுந்து பாசறை அமைத்தான்.

அங்கு தடை செய்ய முடியாத அரிய படையை உடைய மாவீரனான செங்குட்டுவன் முன்னிலையில்,

உத்தரன்,விசித்திரன்,உருத்திரன்,பைரவன்,சித்திரன்,சிங்கன்,தனுத்திரன்,சிவேதன் என்று சொல்லப்படும் வடதிசைப் பகுதியில் உள்ள மன்னர்கள் எல்லாரும்,’தென்னகத்துத் தமிழரின் ஆற்றலை நாங்களும் காண்போம்’,என்ற எண்ணத்தோடு தங்களுடன் கலந்து நட்புடன் ஒன்று சேர்ந்தார்கள்.அவர்களுடன் கனகவிசயரும் அந்த நேரத்தில் நிலத்தைச் சுருக்கிக் காட்டும் அளவுக்குப் பெரும் படையுடன் செங்குட்டுவனிடம் போர் செய்ய எதிர்த்து வந்தார்கள்.

குறிப்பு

 1. மன்னிய-நிலையான
 2. வீங்குநீர்-மிகுதியான நீர் கொண்ட கடல்
 3. ஞாலம்-உலகம்
 4. நல்-சிறந்த
 5. வலன்-வெற்றி
 6. ஏத்த-போற்ற
 7. நாடாள்-நாட்டை ஆளும்
 8. பாடியிருக்கை-படை வீடு
 9. பெயர்ந்து-நீங்கி
 10. பேரியாற்று-பெரிய ஆறு
 11. வடமருங்கு-வடகரை (மருங்கு-பக்கம்)
 12. எய்தி-அடைந்து
 13. எதிர்கொள-எதிர்கொண்ட
 14. கழிந்தாங்கு-கடந்து
 15. ஓங்குநீர்-கடல்
 16. உத்தரம்-வடதேசம்
 17. மரீஇ-மருவி,மாறி
 18. புலம்-நிலம்
 19. புக்கு-நுழைந்து
 20. பாசறை-படைகள் தங்கும் இடம்
 21. தகைப்பு-தடை
 22. அருந்தானை- அரிய சேனை
 23. மறவோன்-வீரன்
 24. தென்றமிழ்-தென்னகத்துத் தமிழ்
 25. காண்குதும்-காண்போம்
 26. கேண்மை-நட்பு
 27. திரைத்தல்-சுருக்குதல்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>