வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

kaalkotlogo1கால்கோட்  காதை

20.போர் தொடங்கியது

இரைதேர் வேட்டத் தெழுந்த அரிமாக்
கரிமாப் பெருநிரை கண்டுளஞ் சிறந்து
பாய்ந்த பண்பிற்,பல்வேன் மன்னர் 190
காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப
வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர்,
வடித்தோற் கொடும்பறை,வால்வளை நெடுவயிர்,
இடிக்குரல் முரசம்,இழுமென் பாண்டில்,
உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழுக்கத்து 195
மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிரச்

உணவு தேடவுவதற்காக வேட்டைக்குச் செல்ல வேண்டும் என எழுந்த ‘அரிமா’ எனும் சிங்கம்,’கரிமா’ எனும் யானைக் கூட்டத்தைக் கண்டதும்,மனம் மகிழ்ந்து அவற்றின் மேல் பாய்ந்ததைப் போல,தன்னை எதிர்த்து காஞ்சிப் பூ சூடி வரும் பல்வேறு வேலேந்திய மன்னர்களின் ‘காஞ்சித் தானை’ எனும் படைகள் மேல் பாய்ந்து செங்குட்டுவன் போர் செய்தான்.

சூரியனின் கதிர்களைக் கீழே படாதவாறு மறைத்த ஆடைகளால் ஆனக் கொடிகள் உடையப் பந்தலின் கீழ்,தெளிந்தெடுத்தத் தோலினால் அமைந்த ‘கொடும்பறை’ எனும் கொடியப் போர்ப் பறை,’வால்வளை’ எனும் வெண் சங்கு,’நெடுவயிர்’ எனும் நீண்டக் கொம்புகள்.இடி முழக்கம் போலக் குரல் எழுப்பும் முரசுகள்,இனிமையாக ஒலிக்கும் பாண்டில்,பேரொலி எழுப்பி உயிர்களை நடுங்கச் செய்து கொள்ளும் மயிர்க்கண் முரசு ஆகியவை எல்லாம் எழுந்து முழங்கின.அந்த முழக்கங்களின் ஒலியால்,எட்டுத் திசைகளும் அப்போது அதிர்ந்தன ..

குறிப்பு

 1. இரை-உணவு
 2. தேர்-தேடி
 3. வேட்டத்து-வேட்டைக்கு
 4. அரிமா-சிங்கம்
 5. கரிமா-யானை
 6. பெருநிரை-பெரும் கூட்டம் (நிரை-கூட்டம்)
 7. உளம்-உள்ளம்
 8. பல்வேல்-பல்வேறு
 9. காஞ்சித் தானை-எதிராக போர் செய்யும் படை (தானை-படை)
 10. மலைப்ப-திகைக்க
 11. வெயிற்கதிர்-வெயில் ஒளி
 12. துகிற்கொடி-ஆடையால் ஆன கொடி (துகில்-ஆடை)
 13. பந்தர்-பந்தல்
 14. வடித்தோல்-வடித்த தோல்.
 15. கொடும்பறை-போர்ப்பறை
 16. வால்வளை-வெள்ளிய சங்கு
 17. நெடுவயிர்-நீண்ட கொம்பு
 18. இடிக்குரன்-இடிப்போல வலிமையாக (உரன்-வலிமை)
 19. இழும்-இனிமை
 20. பாண்டில்-வெண்கலத்தால் செய்த தாளம்,கஞ்ச தாளம்
 21. உருமுக்குரல்-இடிமுழக்கம் போன்ற ஒலி (உருமு-இடி)
 22. மயிர்க்கண் முரசு-மயிர் சீவாத தோல் போர்த்த கண்ணையுடைய முரசு
 23. மாதிரம்-திசை

21.புழுதி எழுந்தது
KAAL12

சிலைத்தோ ளாடவர்,செருவேற் றடக்கையர்,
கறைத்தோன் மறவர்,கடுந்தே ரூருநர்,
வெண்கோட்டு யானையர் விரைபரிக் குதிரையர்,
மண்கண் கெடுத்தவிம் மாநிலப் பெருந்துகள் 200
களங்கொள் யானைக் கவிழ்மணி நாவும்
விளங்குகொடி நந்தின் வீங்கிசை நாவும்
நடுங்குதொழி லொழிந்தாங்கு ஒடுங்கியுள் செறியத்

மலைப் போல வலிமையானத் தோள் உடையவர்கள்,போர் செய்யும் வேல் ஏந்திய பெரிய கைகள் உடையவர்கள்,வேகமாகச் செல்லும் தேரின் மேல் ஏறி ஊர்ந்துச் செல்பவர்கள்,வெள்ளை நிறக் கொம்புகள் உடைய யானைகள் மீது வரும் யானை வீரர்கள்,விரைந்து செல்லும் குதிரைகள் மீது வரும் குதிரை வீரர்கள் ஆகியவர்கள் வரும் வேகத்தால் நிலத்தில் எங்கும் மிகுதியாகத் தூசு படர்ந்திருந்தது.அவை மண்ணின் பார்வையை மூடிக் கெடுத்தன.போர் யானைகளின் கழுத்தில் கட்டிய கவிழ்ந்த மணிகளின் நாவும்,கொடியில் கட்டிய மிகுந்த இசையுடைய ‘நந்து’ எனும் சங்குகளின் நாவும்,நிறைந்திருந்த புழுதியால் அசைவின்றி ஒடுங்கிப் போயின.

குறிப்பு

 1. சிலைத்தோள்-வில்லை உடைய தோள் (சிலை-வில்);மலை போல வலிமை வாய்ந்த தோள் (சிலை-மலை)
 2. செருவேல்-போர் புரியும் வேல் (செரு-போர்)
 3. தடக்கையர்-பெரிய கை உடையவர்கள் (தடக்கை-பெரிய கை)
 4. கறைத்தோல் மறவர்-கரிய கேடயம் தாங்கிய வீரர் (கிடுகு-கேடயம்:மறவர்-வீரர்)
 5. கடுந்தேர்-விரைந்து செல்லும் தேர்
 6. ஊருநர்-ஊர்ந்து செல்பவர்,ஓட்டுபவர்
 7. வெண்கோட்டு-வெள்ளை நிற கொம்பு (கோட்டு-கொம்பு)
 8. விரைபரி-விரையச் செல்லும் குதிரைகள்
 9. குதிரையர்-குதிரையை செலுத்துபவர்கள்
 10. களங்கொள்-களத்தில் புகுந்த
 11. கவிழ்மணி-கவிழ்ந்த மணி
 12. நந்து-சங்கு
 13. வீங்கு-மிகுந்த

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>