வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

kaalkotlogo1கால்கோட்  காதை

24.கனகனும்,விசயனும் அகப்பட்டார்கள்

 

kaal14a

வாய்வா ளாண்மையின் வண்டமி ழிகழ்ந்த
காய்வேற் றடக்கைக் கனகனும் விசயனும்,
ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு,
செங்குட் டுவன்றன் சினவலைப் படுதலும்

சடையினர்,உடையினர்,சாம்பற் பூச்சினர் 225
பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்,
பாடு பாணியர்,பல்லியத் தோளினர்,
ஆடு கூத்த ராகி யெங்கணும்
ஏந்துவா ளொழியத் தாந்துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக் 230

வாய் பேச்சில் ஆண்மை உடையதால்,வளமான தமிழை இகழ்ந்த,கொதிக்கும் வேல் ஏந்திய பெரிய கை உடையக் கனகனும்,விஜயனும்,கடுமையாக விரைந்து ஓடும் தேரைச் செலுத்தும் ஐம்பத்திருவரும்,செங்குட்டுவனின் கோப வலையில் அகப்பட்டுக் கொண்டார்கள்.

அப்போது,எஞ்சிய வடநாட்டுப் படைகள் நடுங்கி,நான்கு பக்கமும் சிதறி ஓட முயன்றார்கள்.சடைமுடி,காவி உடை,சாம்பல் ஆகியற்றை தரித்த துறவிகளாகவும்,பீடம்,மயில் தொகை ஏந்திய சமண முனிவராகவும்,பாடும் பாணியராகவும்,பல வாத்தியங்களைத் தோளில் வைத்து ஆடும் கூத்தராகவும்,அவர்கள் தங்களுக்கு ஏற்ற வேடம் அணிந்துக் கொண்டு போர்க்களத்தை விட்டு அஞ்சி ஓடினார்கள்.எல்லாப் பக்கமும் தமிழர்களுக்கு எதிராக எடுத்த வாள்கள் எதுவும் இல்லாதபடி,அனைத்துமே ஒழிந்தன.மேலும் தாங்கள் கற்ற வித்தைகளுக்கு ஏற்றவாறுப்,பல்வேறு கோலம் கொண்டு,தங்கள் விருப்பம் போலத் தன்னை மறைத்துக் கொண்டு,களத்தில் தோற்ற வடநாட்டுப் படை வீரர்கள் பலரும் சிதறி ஓடிவிட்டார்கள்.

குறிப்பு

 1. வாய்வாளாண்மை-வாயாகிய வாளின் ஆண்மை
 2. வண்டமிழ்(வண்தமிழ்)-வளமான தமிழ் (வண்-வளம்)
 3. காய்வேல்-கொதிக்கும் வேல்
 4. தடக்கை-பெரிய கை (தட-பெரிய)
 5. கடுந்தேராளர்-விரைந்து செல்லும் தேரை ஓட்டுபவர்கள்
 6. சினவலை-கோப வலை
 7. பீடிகை-பீடம்,மணை
 8. பீலி-மயில் தோகை
 9. பாணியர்-பாணர்
 10. பல்லியத்தோ ளினர்-பல வாத்தியங்களைத் தோளில் வைத்திருப்பவர்கள் (பல்லியம்-பல்வகை வாத்தியங்கள் சேர்ந்து ஒலிக்கும் இசை)
 11. போகிய-இல்லாத
 12. விச்சை-வித்தை
 13. படர்தர-செல்ல

25.வெற்றிக் கூத்து

கச்சை யானைக் காவலர் நடுங்கக்
கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக,
ஆளழி வாங்கி,அதரி திரித்த
வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தித்,
தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி; 235

முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்திக்,
கடல்வயிறு கலக்கிய ஞாட்புங் கடலகழ்
இலங்கையி லெழுந்த சமரமுங் கடல்வணன்
தேரூர் செருவும் பாடிப் பேரிசை
முன்றேர்க் குரவை முதல்வனைவாழ்த்திப், 240

பின்றேர்க் குரவைப் பேயாடு பறந்தலை

‘கச்சை’ எனும் கயிறுக் கட்டிய யானைகளை உடையக் காவலர்கள் பலர் நடுங்குமாறு,கொட்டுடைய விலங்கான யானையைப் போர் அடிக்கும் எருதாகப் பூட்டி,வாளை எருதைத் தூண்டும் கோலாகக் கொண்டு,பகை வீரர்கள் என்னும் வைக்கோலின் மேல் போர் அடித்த,வாளாகிய ஏர் உடைய உழவனான செங்குட்டுவனின் போர்க்களத்தை வாழ்த்தினார்கள்.

வீர வளை அணிந்தத் தங்கள் நீண்டக் கைகள் அசையுமாறு தூக்கி,முடி உடையக் கருந்தலைகளை முந்தும்மாறு ஏந்திக் கொண்டு,

அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் நடந்த பெரிய போரில்,கண்ணன் கடல் வயிற்றைக் கலக்கிய வலிமையையும்,

கடலைக் கோட்டையாக உடைய இலங்கையில் எழுந்த இராமாயணப் போரையும்,

கடல் வண்ணனானத் திருமால் பாரதப் போரில் தேரோட்டிய சிறப்பையும்‘,

செங்குட்டுவவனின் வெற்றியோடு ஒப்பிட்டு,பெரும் புகழுடைய முதல்வனான செங்குட்டுவவனின் தேர் முன் அவனை வாழ்த்திப் பாடி ‘முன்தேர்க் குரவை’ ஆட்டத்தையும்,’பின்தேர்க் குரவை’ ஆட்டத்தையும் பேய்கள் போர்க்களத்தில் ஆட,போர்க்களம் வெற்றி வாழ்த்தொலிகளுடன் விளங்கியது!

குறிப்பு

 1. கச்சை-யானையில் கட்டும் கயிறு
 2. கோட்டுமா-கொம்புள்ள விலங்கு
 3. ஆள்-வீரர்கள்
 4. அழி-நெற்போர்.வைக்கோல்
 5. அதரி திரித்தல்-நெல்மணிகளை அடித்த அரிதாளினை மீண்டும் கடாவிட்டு வைக்கோலை உதறியெடுத்தல்
 6. மறக்களம்-போர்க்களம்
 7. தொடி-வளை
 8. ஞாட்பு-போர்,வலிமை
 9. அகழ்-அகழி,கோட்டை
 10. சமரம்-போர்
 11. செரு-போர்
 12. பறந்தலை-போர்க்களம்
 13. கோல்-தாற்றுக்கோல்
 14. முன்தேர்க் குரவை-பகையரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த் தலைவரோடு கைபிணைந்தாடுவது
 15. பின்தேர்க் குரவை-வென்ற அரசன் தேரின்பின்னே கூளிச் சுற்றம் ஆடுவது.
  தேரின் பின் நின்று கொண்டு மறவரும் விறலியரும் வேந்தனைப் புகழ்ந்து பாடுவது

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>