வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

nklogo   நீர்ப்படைக் காதை

4.வீரர்களுக்கு மரியாதை

nk3

நீணில மன்னர் நெஞ்சுபுக லழித்து, 25
வானவர் மகளிரின் வதுவைசூட் டயர்ந்தோர்;

உலையா வெஞ்சமம் ஊர்ந்தமர் உழக்கித்
தலையுந் தோளும் விலைபெறக் கிடந்தோர்,

நாள்விலைக் கிளையுள்,நல்லம ரழுவத்து,
வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்; 30

குழிகட் பேய்மகள் குரவையிற் றொடுத்து
வழிமருங் கேத்த வாளொடு மடிந்தோர்

கிளைக டம்மொடு,கிளர்பூ ணாகத்து
வளையோர் மடிய மடிந்தோர்;மைந்தர்,

மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத் 35
தலைத்தார் வாகை தம்முடிக் கணிந்தோர்;

திண்டேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழப்
புண்டோய் குருதியிற் பொலிந்த மைந்தர்;

மாற்றருஞ் சிறப்பின் மணிமுடிக் கருந்தலைக்
கூற்றுக்கண் ணோட,அரிந்துகளங் கொண்டோர்; 40

நிறஞ்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து
புறம்பெற வந்த போர்வாள் மறவர்;

வருக தாமென வாகைப் பொலந்தோடு
பெருநா ளமயம் பிறக்கிடக் கொடுத்துத்

தோடார் போந்தை தும்பையொடு முடித்துப் 45
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன்
ஆடுகொள் மார்போ டரசுவிளங் கிருக்கையின்

“பெரிய உலகை ஆளுகின்ற மன்னர்களின் நெஞ்சில் இருந்த கர்வத்தை அழித்துப் போரில் உயிர் இழந்த்தால்,சுவர்க்கம் சென்று தேவலோகப் பெண்களால் மணமாலை சூட்டப்பட்ட வீரர்களும்,

சலிக்காமல் விளங்கும் வெப்பமான போர்க்களத்துக்குச் சென்று,பகைவர்கள் கலங்குமாறு போரிட்டபின்,தன் தலையும் தோளும் வேறு வேறாகத் துண்டிக்கப்பட்டுக் கிடந்த பெரும் மதிப்புக்கு உடையவர்களும்,

தன் வாழ்நாளையே மன்னனுக்கு விலையாகத் தந்த படை வீரர்களும்,

நல்ல போர்க்களத்தில் வாளால் செய்கின்ற ஆற்றலெல்லாம் காட்டி முடித்து,அந்த வீரத்துடன் போரில் வீழ்ந்த வீரர்களும்,

குழிந்த கண்களுடைய பேய் மகள் மகிழ்ந்து ஆடுகின்ற குரவைக் கூத்துடன்,தாம் செல்லும் வழியெங்கும் போற்றுமாறு பகைவர்களைக் கொன்றுக் குவித்தபின்,தாங்களும் வாள் பட்டு வீழ்ந்த பெரிய வீரர்களும்,

தங்கள் உறவினர்களோடு இருக்கும் பூண் அணிந்த மார்புடைய,வளையல்கள் அணிந்த தன் காதலி துன்பம் அடையுமாறு மடிந்த ஆற்றல் உடையவர்களும்,

தங்களோடு மாறுபட்டுப் போரிட்டு எதிர்த்து வந்தவர்கள் வாளோடு இறந்த பின்,தன் தலைமாலையுடன் போரில் வெற்றி பெற்றவர்கள் சூடும் வாகைமாலையையும் அணிந்த வீரர்களும்,

உறுதியான ‘கொடுஞ்சி’ எனும் இருக்கை உடைய தேரில் வந்த பகை வீரர்கள் வீழுமாறு வெட்டி வீழ்த்தியதால்,ஏற்பட்ட காயங்களில் இருந்து பெருகிய இரத்த வெள்ளத்தில்,பொலிவு பெற்றுத் தோன்றுகிற வீரரர்களும்,

மாறாத சிறப்பைக்கொண்ட மணிமுடி சூடிய கருமையான தலைகளை,எமனும் இரக்கப்படுமாறு,அறுத்து வீழ்த்திக் களத்தினைத் தமதாக்கிக் கொண்ட வீரர்களும்,

அழகு அழிந்த கவசத்துடன் புதுப்புண்கள் பலவற்றைப் பெற்றுப்,புறமுதுக்கிட்டு ஓடும் பகைவீரர்களை விட்டுவிட்டு,மீண்டும் களத்திற்கு வந்து போரிட்ட போர்வாள் கொண்ட வீரர்களும்”,

ஆகிய அனைவரும் வருக என அழைத்து,அவர்களுக்கு பொன்னால் செய்த வாகை மலரை வரிசையாகக் கொடுத்துப் பாராட்டினான் சேரன் செங்குட்டுவன்.அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்ததால்,அந்த முக்கியமான நாள் முழுதும் இதற்குத் தேவைப்பட்டது.

பின்னர் சேரர்களுக்கு உரிய,இதழ் பொருந்திய பனம்பூ மாலையுடன்,தும்பை மாலையையும் சேர்ந்து அணிந்து,போர்க்களம் பாடுவோர் பாடும் துறைகள் எல்லாம் செய்துமுடித்து,வெற்றி மன்னனாகத் திகழும் மன்னனான செங்குட்டுவன்,வெற்றியின் பெருமிதம் நிறைந்த மார்புடன்,தன் அவையாரோடும் கூடி,மகிழ்வாக அமர்ந்திருந்தான் .

குறிப்பு

 1. நீணில-நீண்ட நிலம்
 2. புகல்-புகழ்,செருக்கு
 3. வதுவை-மணமாலை
 4. அயர்ந்தோர்-தளர்ந்தோர்
 5. உலையா-கெடாத,அசைவில்லாத
 6. வெஞ்சமம்-போர்க்களம்
 7. அமர்-போர்
 8. உழக்கி-கலக்கி
 9. நாள்விலைக் கிளை-அரசனளித்த செஞ்சோற்றுக்கும் சிறப்புக்கும் விலையாகத் தம் வாழ்நாளைத் தரும் வீரர்
 10. மறம்-வீரம்
 11. மருங்கு-பக்கம்
 12. ஏத்த-போற்ற
 13. கிளர்-விளங்கும்
 14. பூண்-பூணூல்
 15. ஆகத்து-மார்பில் (ஆகம்-மார்பு)
 16. வளையோர்-வளையல். அணிந்த பெண்கள்
 17. தார்-மாலை
 18. திண்-உறுதி
 19. கொடுஞ்சி-தேரின் நடுவில் இருக்கும் தாமரை வடிவிலான இருக்கை.தேரின் முன் பகுதியில் இருக்கும் அலங்காரம் என்றும் சொல்கிறார்கள்.
 20. தேரோர்-தேரில் வருபவர்
 21. கூற்று-எமன்
 22. நிறம்-வடிவம்,மார்பு
 23. கவயம்-கவசம்
 24. பொலம்-தங்கம்
 25. அமையம்-காலம்
 26. தோடார்-இதழ் பொருந்திய (தோடு-இதழ்;ஆர்-பொருந்திய)
 27. தோடு-இதழ்
 28. ஆர்-பொருந்திய
 29. போந்தை-பனம்பூ
 30. கொற்றம்-வெற்றி
 31. ஆடு-வெற்றி
 32. கொள்-கொண்ட

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>