வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

nklogo   நீர்ப்படைக் காதை

8.கோவலனின் பெற்றோர் நிலை
nk6

மைந்தற் குற்றதும்,மடந்தைக் குற்றதும்,
செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக்,
கோவலன் தாதை கொடுந்துய ரெய்தி, 90
மாபெருந் தானமா வான்பொரு ளீத்தாங்கு,
இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு,
அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று
துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் 95

துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள்
இறந்ததுய ரெய்தி இரங்கிமெய் விடவும்

தன் மகனான கோவலனுக்கு நேர்ந்த மரணம்,அதனால் கண்ணகிக்கு நேர்ந்த துன்பம்,செங்கோல் மன்னனான நெடுஞ்செழியனுக்கு நேர்ந்த கதி ஆகியவற்றைக் கேள்விப்பட்டுக்,கோவலனின் தந்தை கடுமையான துன்பத்திற்கு ஆளானார்.

தன்னுடைய பெரும் செல்வங்கள் அனைத்தையும் மிகப்பெரிய தானமாக அளித்து விட்டார்.இந்திரவிகாரம் எழிலும் புகுந்து,பிறந்த இந்த உலகோடு இனி பிறப்பு என்பது இல்லாமல் அறுத்துக் கொள்ள முயன்று துறந்த,வானில் உலவும் சாரணர்களான ‘அந்தசாரிகள்’ முன்னூறு பேரின் முன்னிலையில்,தானும் துறவை ஏற்று,ஒரு துறவியாகி விட்டார்.

அவ்வாறு துறவியாகப் போன கோவலனின் தந்தை மாசாத்துவானின் மனைவி,தன் மகன் இறந்த செய்தியால் பொறுக்க முடியாத துயர் உற்றாள்.அளவு கடந்த துன்பத்தில் மூழ்கி,ஏங்கி ஏங்கித்,தன் உடலில் இருந்து உயிரை நீக்கி இறந்துவிட்டாள்.

குறிப்பு

 1. மைந்தன்-மகன்
 2. மடந்தை-பெண்
 3. தாதை-தந்தை
 4. வான்பொருள்-சிறந்த செல்வம்
 5. இந்திர விகாரம் ஏழ்-இந்திரனால் இயற்றப்பட்ட ஏழு அரங்கு
 6. அந்தரசாரிகள்-வானில் உலவும் சாரணர்கள்
 7. ஆறு ஐம்பதின்மர்-6*50=300 முந்நூறு பேர்
 8. யாக்கை-உடல்
 9. பொறாஅள்(பொறாளாய்)-பொறுக்க முடியாதவளாய்
 10. மெய்-உடல்

9.கண்ணகியின் பெற்றோர் நிலை

nk61

கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் 100
தானம் புரிந்தோன் றன்மனைக் கிழத்தி
நாள்விடூஉ நல்லுயிர் நீத்துமெய் விடவும்,

கண்ணகியின் நிலை அறிந்த தந்தை,முனிவர் கோலத்தில் இருந்த மரியாதைக்குரிய பெருந்தவம் புரிந்த ஆசீவகர் முன்,புண்ணியம் தரும் தானங்கள் பல செய்து,அறவாழ்க்கையை மேற்கொண்டார்.

அவரின் மனைவியான கண்ணகியின் தாய்,வாழ்நாளை விட்டு,தன் உயிர் துறந்தாள்.

குறிப்பு

 1. தாதை-தந்தை
 2. கடவுளர்-முனிவர்
 3. அண்ணல்-மரியாதைக்குரிய தலைவர்
 4. ஆசீவகர்-ஆசீவக முனிவர்
 5. கிழத்தி-உரிமையுடையவள்
 6. நாள்விடூஉ-வாழ்நாளை விட்டு

10.மாதவி நிலை
nk62
மற்றது கேட்டு,மாதவி மடந்தை,
நற்றாய் தனக்கு,நற்றிறம் படர்கேன்

மணிமே கலையை வான்துயர் உறுக்குங் 105
கணிகையர் கோலங் காணா தொழிகெனக்
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும்;

கோவலன்,கண்ணகி பற்றியச் செய்தியை மாதவியும் கேட்டாள்.

தன்னைப் பெற்ற தாயிடம்,’நான் இனி எந்த விதமான நல்ல நகைகளையும் அணிய மாட்டேன்.என் மகள் மணிமேகலைக்கு,மிகுந்த துன்பம் தரக்கூடிய கணிகையர் கோலம் வேண்டாம்’,என்று சொல்லிவிட்டுத்,தான் அணிந்திருந்த கோதை மாலையுடன் தன் கூந்தலையும் களைந்தாள்.போதி மாதவரான புத்தர் முன் செய்யும் புண்ணியம் தரும் தானங்களான ‘போதித் தானம்’ பல புரிந்து,துறவி ஆனாள்.

குறிப்பு

 1. மடந்தை-பெண்
 2. நற்றாய்-பெற்ற தாய்
 3. நற்றிறம்-நல்ல நெறி (நல்+திறம்)
 4. படர்கேன்-செல்வேன்
 5. வான்துயர்-மிகுந்த துன்பம்
 6. உறுக்கும்-மிகுதியாக தரும் (உறு-மிகுதி)
 7. கணிகையர்-கணிக்கும் திறமை உள்ள பெண்
 8. கோதை-மாலை வகை
 9. தாமம்-மாலை
 10. குழல்-கூந்தல்
 11. போதித்தானம்-போதி மாதவரான புத்தர் முன் செய்யும் புண்ணிய தானம்

11.மாடலன் வந்த காரணம்

என்வாய்க் கேட்டோர் இறந்தோ ருண்மையின்,
நன்னீர்க் கங்கை யாடப் போந்தேன், 110
மன்னர் கோவே,வாழ்க ஈங்கெனத்

‘இப்படி நான் வாயால் சொன்னச் செய்தியைக் கேட்டவர்களில் இறந்தவர்களும் உள்ளார்கள் என்பதால்,நல்ல நீரையுடைய கங்கையில் நீராடி,அந்தப் பாவத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக நான் இங்கு வந்தேன்’,என்று தான் வந்த காரணத்தைக் கூறி,’வாழ்க ! மன்னர் கோமானே!’,என்று சேரன் செங்குட்டுவனை வாழ்த்தினார் மாடலன்.

குறிப்பு

 1. வாய்க்கேட்டோர்-வாயால் பேசியவற்றை கேட்டோர்
 2. போந்தேன்-வந்தேன்
 3. கோ-மன்னன்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>