வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

nklogo   நீர்ப்படைக் காதை

12.தென்னவன் நாட்டு நிலை

nk7
தோடார் போந்தை தும்பையொடு முடித்த
வாடாவஞ்சி வானவர் பெருந்தகை,
மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115

நீடு வாழியரோ நீணில வேந்தென,
மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின்

மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர்,

இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் 120
வளநா டழிக்கும் மாண்பின ராதலின்
ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்!

பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு
வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப் 125
போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்

கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்
பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு,

ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி, 130
உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலை,
தென்புல மருங்கில்,தீதுதீர் சிறப்பின்,
மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலின்,

நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட 135
ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவுளே றினனென,
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்

ஊழிதொ றூழி உலகங் காத்து
வாழ்க எங்கோ வாழிய பெரிதென, 140

மறையோன் கூறிய மாற்ற மெல்லாம்
இறையோன் கேட்டாங் கிருந்த எல்லையுள்

இதழ் பொருந்திய ஆண் பனம் பூவானப் போந்தையை,தும்பை மலரோடு சேர்த்துக் கட்டி அணிந்த,வஞ்சி நகரின் மன்னனான,பண்புகளில் பெரியவரான சேரன் செங்குட்டுவன் மாடலனிடம்,”மன்னன் இறந்தபின்னர் வளம் பொருந்தியச் சிறப்பையுடைய பாண்டிய நாடு செய்ததை,எனக்கு இப்போது கூறுங்கள்”,என்று கேட்டார்.

‘பெரும் நிலத்தை ஆளும் மன்னனே,நீடுடி வாழ்வாயாக!’,என்று வாழ்த்தி,மாடல மறையோன்,மன்னனுக்கு கூற ஆரம்பித்தார்…

“இளையவனான உன் மைத்துனன் சோழன் பெருங்கிள்ளி ஆட்சிக்கு வந்தது,ஒத்த எண்ணம் உடைய ஒன்பது சோழர்குலக் குறுநில மன்னர்களுக்குப் பிடிக்கவில்லை.அதனால் அவன் ஆணைக்கு அடங்காதவர்களாக இருந்தார்கள்.அவர்கள் வளமையான சோழ நாட்டை அழிக்கும் வலிமை உடையவர்கள் என்பதால்,அவர்களை வென்று,அவர்களின் ஒன்பது குடைகளை ஒரு பகல் பொழுதுக்குள் அழித்து,பெருங்கிள்ளியின் ஆட்சியை ஒரு நிலைப் பட செய்தவரே!கேளுங்கள்!

பழையன் எனும் குறுநில மன்னன் காவல் காத்து வந்த,இலைகள் நிறைந்த நீண்டக் கொம்புகளுடைய அவனுடைய காவல் மரமான வேப்ப மரத்தை,அடியோடு வெட்டிய வெற்றிவாளை ஏந்திய,ஆண் பனம் பூமாலையை அணிந்த,மலைநாட்டை உடையப் ‘பொறையனே’!கேள்!

கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் என்பவன் மதுரையில் நடந்த அனைத்தையும் அறிந்து மதுரைக்கு வந்தான்.பொன்வேலை செய்யும் கொல்லர் ஆயிரம் பேரை,ஒரு மார்பை இழந்த மாபெரும் பத்தினியான கண்ணகிக்கு,ஒரு பகல்பொழுதின் எல்லையான மாலை வேளையில் உயிர் பலியாகப் படைத்தான்.அந்த நேரம் முன்பு இருந்த எல்லாப் புகழையும் இழந்து,பழிச் சொல்லுக்கு ஆளான நிலையில்,தன் அரசையும் இழந்து மிகுந்த துன்பத்தில் இருந்தது பழமையான மதுரை நகரம்.அச்சமயம் செழியன் செய்த செயலால்,தென்னகத்தில் தீமை இல்லாத சிறப்பான மக்களைக் காத்துவரும் முறையையும்,முதன்மையும் உடையப் பாண்டிய நாட்டின் அரசுக் கட்டிலில் ஏறினார்.

நிரையான மணிகள் அணிந்த ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேரின் மேல் வரும் கடவுளானக் கதிரவன்,தன் தேரில் காலையில் ஏறி அமர்ந்து வந்து இருளை நீக்கிப் பகலைச் செய்தது போல,மாலையில் தோன்றும் சந்திரனின் மரபைச் சேர்ந்த வெற்றிவேல் செழியனும்,பாண்டிய நாட்டின் அவலத்தைப் போக்கி,அரியணை ஏறி,மதுரையில் சூழ்ந்திருந்த துன்ப இருளை அறவே அகற்றினான்.

எங்கள் மன்னனே!ஊழிதோறும் ஊழிதோறும் உலகைக் காக்கும் நீயும் வாழ்வாயாக “,

பிராமணரான மறையோன் இப்படிக் கூறியதை எல்லாம் கேட்டு,இறைவனான மன்னன் செங்குட்டுவனும்,அந்த இடத்தில் வீற்றிருந்தார்.

குறிப்பு

 1. தோடு-இதழ்
 2. போந்தை-ஆண் பனை மரம்
 3. வாடாவஞ்சி-வஞ்சி மலர் அல்ல,அதே பெயர் கொண்ட வாடாத வஞ்சி நகர்
 4. பெருந்தகை-பண்புகளில் பெரியவர் (தகை-பண்பு)
 5. வளங்கெழு-வளம் பொருந்திய (கெழு-பொருந்திய)
 6. தென்னவன்நாடு-பாண்டியநாடு
 7. நீணில(ம்)-நீண்ட நிலம்
 8. வளவன்-சோழன்
 9. கிள்ளி-பெருங்கிள்ளி
 10. பொறாஅர்-பொறுக்காதவராய்
 11. ஏவல்-கட்டளை
 12. மாண்பினர்-தன்மை உடையவர்கள் (மாண்பு-தன்மை)
 13. பொன்புனை-அழகாக செய்த (பொன்-அழகு)
 14. திகிரி-சக்கரம்
 15. படுத்தோய்-செய்தவரே
 16. பழையன்-மோகூரைச் சேர்ந்த ஓர் குறுநில மன்னன்
 17. குழைபயில்-தளிர் மிகுந்த (குழை-தளிர்:பயில்-மிகுந்த)
 18. நெடுங்கோட்டு-நீண்ட கொம்பு (கோட்டு-கொம்பு)
 19. வேம்பு-வேப்பை,வேப்ப மரம்
 20. தடிந்த-குறைத்த
 21. வலத்து-வெற்றியை (வலம்-வலிமை,வெற்றி)
 22. கண்ணி-மாலை
 23. பொறையன்-மலைநாட்டை உடையவன் (பொறை-மலை)
 24. வாள்வலம்-வாளால் சூடக் கூடிய வளமான வெற்றி
 25. செழியன்-பாண்டியன்
 26. ஈரைஞ்ஞூற்றுவர்-2*500=1000 ஆயிரம் பேர்
 27. உரை-புகழ்
 28. வெறுத்தல்-மிகுதல்
 29. அரைசு-அரசு
 30. அலம்-துன்பம்
 31. அல்லற்காலை-அல்லல் மிகுந்த காலம்
 32. தென்புல(ம்)-தென்னாடு (புலம்-நிலம்)
 33. மருங்கு-பக்கம்
 34. தீதுதீர்-குற்றம் தீர்த்த
 35. மன்பதை-மக்கள் கூட்டம் (மன்-மாந்தன் பதை-கூட்டம்?)
 36. புரவி-குதிரை
 37. ஓரேழ்-1*7=7 ஏழு
 38. ஆழிக் கடவுள்-சூரியன்
 39. தேர்மிசை-தேர் மீது (மிசை-மீது)
 40. ஊழி-நீண்ட காலப்பகுதி
 41. மறையோன்-அந்தணர்,பிராமணர்
 42. இறையோன்-இறைவனான மன்னன்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>