வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

nklogo   நீர்ப்படைக் காதை

15.சோழர்களின் நிலை

வாயி லாலரின் மாடலற் கூஉய்,

இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர்,
வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு 160
செங்கோற் றன்மை தீதின் றோவென

எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்

வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப,
எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் 165
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க,
அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்,
திரிந்துவே றாகுங் காலமு முண்டோ
தீதோ இல்லைச் செல்லற் காலையுங் 170
காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கென்று

வாசலில் காவல் காப்பவர்களிடம் மாடலனை வரச்சொல்லி அழைத்தார் சேரன் செங்குட்டுவன்.

மாடலன் வந்தவுடன்,’தன் மைத்துனன் சோழன் பெருங்கிள்ளியோடு பகைமை பாராட்டியதால் தன்னால் வீழ்த்தப்பட்ட,இளவரசர்கள் ஒன்பது பேர் இறந்து போன பின்னர்,வளம் பொருந்திய நல்ல சோழ நாட்டு மன்னவனின் வெற்றியும்,செங்கோலின் தன்மையும்,எந்தத் தீங்கும் இல்லாமல் உள்ளதா?’,என்று செங்குட்டுவன் மீண்டும் அவனிடம் கேட்டார் .

‘எங்கள் கோமானாகிய மன்னனே !நீ வாழ்க’,என்றுப் போற்றி,நன்மை பொருந்திய அந்தணரான மாடலன் கூறத் தொண்டங்கினார்…

ஒளி வீசும் மாணிக்கப் பூண்களை அணிந்தத் தேவர்கள் தலைவன் வியந்து போற்றுமாறு வானில் தொங்கிய மூன்று மதில்களையும் அழித்த பேராற்றல் மிகுந்த வேலின் வெற்றி உடையவர்கள் சோழர்கள்.குறு நடை நடக்கும் புறாவின் பெரும் துன்பம் அழியுமாறும்,அந்தப் புறாவைக் கொன்று,உண்ணக் கருதித் துரத்தி வந்த பருந்தின் பசித் துயர் நீங்குமாறும்,தன் உடம்பை அரிந்து இட்டவர் சிபி என்னும் சோழ மன்னர்.அறம் தரும் அத்தகைய செங்கோல் மாறும் காலம் சோழ நாட்டில் உள்ளதா?

கொடிய வறட்சிக் காலத்திலும்,காவிரியால் நீர் அளித்துக் காக்கப்படுகின்ற நாட்டிற்கு உரியவரான சோழர்களுக்கு,எந்தத் தீங்கும் அதற்குப் பின்னர் இன்றளவும் இல்லை’,என்று அரிய வேதங்கள் உணர்ந்த மாடலன் சொன்னதைக் கேட்டு,சேரன் செங்குட்டுவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

குறிப்பு

 1. இளங்கோ-இளவரசர் (கோ-அரசர்)
 2. வாயிலாலர்-வாசலில் காவல் காப்பவர்
 3. கூஉய்-கூய்,கூவி
 4. வளங்கெழு-வளம் பொருந்திய (கெழு-பொருந்திய)
 5. மங்கலம்-ஆக்கம்,நன்மை
 6. கொற்றம்-வெற்றி
 7. நன்னாட்டு-நல்ல நாட்டு
 8. ஏத்தி-போற்றி
 9. வெயில்-ஒளி
 10. மணிப்பூண்-மாணிக்கம் பூண்ட நகை
 11. விண்ணவர்-தேவர்கள்
 12. வியப்ப-வியக்க
 13. எயில்-மதில்
 14. இகல்வேல்-மாறுபட்ட வேல் (இகல்-மாறுபடுதல்)
 15. கொற்றம்-வெற்றி
 16. புறவு-புறா
 17. எறிதரு-வாள் எறிந்து கொலை செய்தல்
 18. இடும்பை-துன்பம்
 19. அறந்தரு-அறம் தருகின்ற
 20. புரக்கு(ம்)-காக்கும்
 21. நாடுகிழவோர்-நாட்டின் மேல் உரிமை உள்ளவன் (கிழவோர்-உரியவன்)

16.துலாபாரம்
nk9
அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே
பெருமகன் மறையோற் பேணி யாங்கவற்கு
ஆடகப் பெருநிறை யையைந் திரட்டித்,
தோடார் போந்தை வேலோன் றன்னிறை 175
மாடல மறையோன் கொள்கென் றளித்தாங்கு

ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரைச்
சீர்கெழு நன்னாட்டுச் செல்கவென் றேவித்

பெருந் தலைவனான செங்குட்டுவன்,மாடலானைப் பெரிதும் போற்றி உபசரித்தார்.அவருக்குத் தன் எடைக்குச் சமமான ஐம்பது துலாம் தங்கத்தை துலாபாரமாகத் தர எண்ணினார்.தான் நினைத்தபடி,’இதழ் பொருந்திய ஆண் பனை மரத்தின் பூவை மாலையாக அணிந்த வேலேந்திய சேரன்,’மாடல மறையோனே இவற்றை ஏற்றுக் கொள்’,என அளித்தும் மகிழ்ந்தார்.

மேலும் அங்கிருந்த ஆரிய மன்னரான நூறு பேரிடம்,’நீங்கள் அனைவரும் உங்கள் சிறப்பு மிக்க நாட்டிற்குச் சென்று வாருங்கள்’,என்று விடை தந்து அனுப்பி வைத்தார் .

குறிப்பு

 1. அருமறை-அரிய வேதம் (அரு-அரிய:மறை-வேதம்)
 2. முதல்வன்-தலைவன்
 3. பெருமகன்-பெரியவன்,தலைவன்
 4. ஆடகம்-பொன்,தங்கம்
 5. பெருநிறை-பெரிய எடை (நிறை-எடை)
 6. தோடார்-இதழ் உடைய (தோடு-இதழ்:ஆர்-பொருந்திய)
 7. ஐயைந்து இரட்டி-ஐயைந்து(5*5=25) * இரட்டி(2)= 50 ஐம்பது
 8. ஆர்-பொருந்திய
 9. போந்தை-ஆண் பனம் பூ
 10. வேலோன்-வேல் ஏந்தியவன்
 11. தன்நிறை-தன் எடை (நிறை-எடை)
 12. ஐயிருபதின்மர்-ஐயிரு(5*2)=10* பதின்மர்(10)=100 நூறு (பதின்மர்-பத்து)
 13. சீர்கெழு-சிறப்பு மிக்க (சீர்(சிறப்பு)+கெழு(பொருந்திய)

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>