வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

nklogo   நீர்ப்படைக் காதை

17.சோழர்,பாண்டியரிடம் காட்டுங்கள்

nk10
தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த
மாபெருந் தானை மன்ன குமரர் 180
சுருளிடு தாடி மருள்படு பூங்குழல்,
அரிபரந் தொழுகிய செழுங்கயல் நெடுங்கண்
விரிவெண் தோட்டு,வெண்ணகைத் துவர்வாய்ச்
சூடக வரிவளை,ஆடமைப் பணைத்தோள்,
வளரிள வனமுலைத் தளரியல் மின்னிடைப் 185
பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு
எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றூவர்
அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை 190
இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவித்

‘தவ வேடம் அணிந்து,தன்னிடம் இருந்து உயிர் பிழைத்துத் தப்பிச் சென்ற,மாபெரும் படைகள் உடைய ஆரிய அரசகுமாரர்களையும்,

சுருண்ட மோவாய்,பூக்கள் அணிந்த கருமையானக் கூந்தல்,செவ்வரி பரந்து விளங்கிய கொழுத்த கயல் மீனைப் போன்ற நீண்டக் கண்கள்,விரிந்த வெள்ளை நிற இதழ் பொருந்திய மாலை,வெண்பற்கள்,பவளம் போன்ற சிவந்த வாய் ஆகியவற்றைக் காட்டி ஏமாற்றியவர்களையும்,

‘சூடகம்’ எனும் அழகிய வளையல்களும்,அசைகின்ற அழகான மூங்கில் போன்ற தோள்களும்,வளமான இள மார்புகளும்,மாந்தளிர் போன்ற மேனியும்,மின்னல் போன்ற இடையும்,’பாடகம்’ அணிந்தச் சிறிய பாதங்களும் உடைய ஆரியப் பேடிகளையும்,

அழிவு இல்லாத போந்தை எனும் ஆண் பனை மலர்கள் சூடிய அரிய தமிழ் மன்னனானத் தன் ஆற்றலைப் பற்றித் தெரியாமல் தன்னுடன் போரிட்டு தோற்ற கனக விசயரையும்’,

சோழ பாண்டியரான இரண்டு பெரும் தமிழ் அரசர்களுக்கும் கொண்டு சென்று காட்டி வருமாறு,வீரம் அழியாத அரசர்களின் மேற்பட்ட மொழிகளையும் மறுத்துப் பேசும் தன்மை உடைய சட்டை அணிந்த ஆயிரம் பேரிடம் சேரன் செங்குட்டுவன் கட்டளை இட்டார்.

குறிப்பு

 1. தாபதம்-தவம்
 2. உய்ந்து-தப்பி
 3. தானை-படை
 4. சுருளிடு-சுருண்ட
 5. தாடி-மோவாய்
 6. மருள்படு-மயக்கம் தருகின்ற,கருமை பொருந்திய (மருள்-மயக்கம்,கருமை: படு-பொருந்திய )
 7. பூங்குழல்-பூக்கள் அணிந்த கூந்தல்,அழகான கூந்தல் (பூ-மலர்,அழகு:குழல்-கூந்தல்)
 8. அரி-வரி
 9. பரந்து-படர்ந்து
 10. ஒழுகிய-ஓடிய
 11. செழு-வளமையான
 12. தோட்டு-இதழ்
 13. ஆடமை-அசைகின்ற அழகான (ஆடு+அமை(அழகு)
 14. பணைத்தோள்-மூங்கில் போன்ற தோள் (பணை-மூங்கில்)
 15. வெண்-வெண்மை,வெள்ளிய,வெள்ளை
 16. வெண்ணகை-வெள்ளை நிற பல்,புன்னகை
 17. துவர்வாய்-பவளம் போன்ற வாய் (துவர்-பவளம்)
 18. வரி-அழகு
 19. வனமுலை-அழகிய முலை (வன(ம்)-அழகு)
 20. தளிர்இயல்-தளிர் போன்ற இயல்பு
 21. மின்இடை-மின்னல் போன்ற இடை
 22. சூடகம்-ஒருவகையான கைவளையல்
 23. பாடகம்-கால் அணி
 24. சீறடி-சின்ன அடி
 25. எஞ்சா-அழியாத
 26. கஞ்சுகம்-சட்டை
 27. இறைமொழி-மேலான மொழி
 28. ஈரைஞ்ஞூற்றுவர்-2*500=100 ஆயிரம் பேர்
 29. இறை மொழி-பெருமித மொழி.
 30. அரியிற்-அழிவு இல்லாத
 31. போந்தை-ஆண் பனம் பூ
 32. அருந்தமிழ்-அரிய தமிழ்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>