வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

nklogo   நீர்ப்படைக் காதை

20.வாழ்த்தினார்கள்

எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் 210
அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர்,
தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப்.
பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச்,

சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று,
பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் 215
நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென

வடதிசையில் பகைவர்களை ஒழித்து,போர் களத்தில் வெற்றிக் கொண்ட,விரைவாகச் செல்லும் தேரை உடைய சேரன் செங்குட்டுவனின் வெற்றி செய்தி அறிந்த வேண்மாளின் செவிலித் தாய்மார்கள்,அதைச் சொல்லி சொல்லி மகிழ்ந்தார்கள்.அவர்கள் வேண்மாளிடம்,’உன் தோள்களுக்குத் துணையாக இருந்த கணவனைப் பிரிந்ததால் நீ அடைந்த எல்லாத் துன்பத்தையும் இப்போதே விட்டு விடு’,என்று,பாட்டுடன் இசைத்துப் பல்லாண்டு பாடி அவளை வாழ்த்தினார்கள்.

வளைந்த உருவம் கொண்டவர்களும்,குறுகிய உருவம் கொண்டவர்களும் வேண்மாளிடம் சென்று,’உன் அழகை நீ மீண்டும் பெறவேண்டும்,நம் தலைவன் வந்து விட்டான்.உன் பொலிவான கரிய கூந்தல் இப்போதே சிறந்த நாட்களில் செய்யப்படும் அலங்காரத்தைப் பெற வேண்டும்’,என மகிழ்ச்சியோடு கூறினார்கள்.

குறிப்பு

 1. கொற்றம்-வெற்றி
 2. ஆயம்-சுற்றம்
 3. செவிலியர்-செவிலித் தாயார்கள்,வளர்ப்புத் தாய்மார்கள்
 4. தோள்துணை-தோளுக்கு துணையாக விளங்கும் கணவன்
 5. கூன்-வளைவு
 6. குறள்-குறுகிய
 7. ஈங்கு-இப்பொழுது
 8. செவ்வி-அழகு
 9. பெருமகன்-தலைவன்
 10. மலர்-பொலிவு
 11. நாளணி-சிறப்பான நாட்களில் செய்யப்படும் அலங்காரம் (அணி-அலங்காரம்)

21.குறத்திகளின் பாட்டு
nk12

அமைவிளை தேறல் மாந்திய கானவன்,
கவண்விடு புடையூஉக் காவல் கைவிட
வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த

ஓங்கியல் யானை தூங்குதுயி லெய்த 220
வாகை,தும்பை வடதிசைச் சூடிய
வேக யானையின் வழியோ நீங்கெனத்
திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக்
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்

மூங்கிலில் விளைந்த கள்ளை உண்ட வேட்டுவன்,’கவண்’ எனும் கல் எறியப் பயன்படும் கருவியால் கல்லை வீசிப்,பறவைகளை அடிக்கும் தன் காவல் தொழிலைக் கை விட்டான்.அதனால் பெரிய தினைப்புனத்தில் உண்ண வந்த உயர்ந்த இயல்புடைய யானை தனக்குத் தேவையான அளவு உண்டு,பின் மயக்கத்தில் அங்கேயே ஆழ்ந்து உறங்கியது.

‘வட நாட்டிற்குச் சென்று வாகை மலரையும்,தும்பை மலரையும் சூடிய,வேகத்தைக் கொண்ட யானையைப் போன்ற சேரன் இந்த வழியில் வருவார்,அதனால் இங்கிருந்து அனைவரும் விலகுங்கள்!’,என்று கூறி,தன் மன்னனின் வெற்றியை,உயர்ந்த பரண் மீது இருக்கும் குறத்திகள் ‘திறத்திறம்’ என்னும் பண்ணில் பாடினார்கள்.

பின் அவர்கள் வேடுவரோடு சேர்ந்து,குறிஞ்சிப் பாணி பாடுவதில் ஈடுபட்டார்கள்.

குறிப்பு

 1. அமை-மூங்கில்
 2. தேறல்-கள்
 3. மாந்திய-உண்ட
 4. கானவன்-வேட்டுவன்
 5. கவண்-கல் எறியப் பயன்படும் கருவி
 6. புடையூஉ-புடைத்து,அடித்து
 7. வீங்குபுனம்-பெரிய புனம் (வீங்கு-பெரிய)
 8. உணீஇய-உண்ணுவதை
 9. வேண்டி-விரும்பி
 10. ஓங்கியல்-உயர்ந்த இயல்பு
 11. தூங்குதுயில்-அயர்ந்த உறக்கம்
 12. திறத்திறம்-பண் வகை
 13. சேண்-உயர்ந்த
 14. இதணம்-பரண்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>