வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)

nklogo   நீர்ப்படைக் காதை

22.உழவர்களின் பாடல்
NK13A
வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் 225
கவடி வித்திய கழுதையே ருழவன்,
குடவர் கோமான் வந்தான் நாளைப்,
படுநுகம் பூணாய்,பகடே மன்னர்
அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும்
தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும் 230

‘வடதிசை மன்னர்களின் நிலையான கோட்டைகளை அழித்து,’கவடி’ என்னும் வெள்வரகை விதைத்துக்,கழுதை ஏர் பூட்டிய ஏரை உழுத குடநாட்டின் மன்னனானச் சேரன் செங்குட்டுவன் வந்து விட்டார்(பகை மன்னர்களை வென்ற அரசன்,பகை மன்னர்களின் அரண்மனைக்குச் சென்று,அங்கு கழுதைகளை ஏரில் பூட்டி உழுது விதைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது).

நாளை பகை மன்னர்களின் கால்விலங்குகளை நீக்கி,வெள்ளை ஆடை அணிந்து நாம் கொண்டாடும் அவரின் பிறந்த நாள்.அதனால்,எருதே ! நீயும் நாளை உன் பிடரியில் படுகின்ற நுகத்தடியைச் சுமந்து உழ வேண்டியதில்லை!’,என்றுக் கூறி விழா எடுத்து உழுகின்ற உழவர்கள்,மகிழ்ச்சியோடு மருத நிலத்தில் பாடும் பாடல்களைப் பாடினார்கள்.

குறிப்பு

 1. மன்னெயில்-நிலையான மதில் (மன்-நிலைபெற்ற:எயில்-மதில்)
 2. கவடி-வெள்வரகு
 3. வித்திய-விதைத்த
 4. ஏருழவன்-ஏரு உழுபவன்
 5. குடவர்-குட நாட்டு மக்கள்
 6. கோமான்-மன்னன்
 7. படுநுகம்-படுகின்ற நுகத்தடி (நுகம்-நுகத்தடி,எருதுகளை பூட்ட பயன்படும் நீளமான தடி)
 8. பகடு-எருது
 9. அடித்தளை-கால் விலங்கு (தளை-விலங்கு)
 10. வெள்ளணி-பிறந்த நாள் அன்று அணிந்துக் கொள்ளும் வெள்ளை ஆடை
 11. தொடுப்பு-விதைத்தல்,விழா எடுத்தல்
 12. ஓதைப்பாணி-மருத நிலத்தில் எழும் பாடல் முழக்கம் (ஓதை-முழக்கம்:பாணி-தாளம்,இசை)

23.இடையர்களின் குழல் இசை
NK13B

தண்ணான் பொருநை யாடுந ரிட்ட
வண்ணமுஞ் சுண்ணமும் மலரும் பரந்து
விண்ணுறை விற்போல் விளங்கிய பெருந்துறை
வண்டுண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை
முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின் 235
முருகுவிரி தாமரை முழுமலர் தோயக்
குருகலர் தாழைக் கோட்டுமிசை யிருந்து
வில்லவன் வந்தான் வியன்பே ரிமயத்துப்
பல்லான் நிரையொடு படர்குவிர் நீரெனக்
காவலன் ஆனிரை நீர்த்துறை படீஇக் 240
கோவலர் ஊதுங் குழலின் பாணியும்

குளிரிந்த ஆன்பொருநையில் குளிக்கின்ற பெண்கள் இட்டுக்கொண்ட வண்ணங்களும்,சுண்ணப் பொடிகளும்,மலர்களும் பரவி,வானில் விளங்கும் இந்திர வில்லைப் போலப் பெரிய நீர் துறைகள் விளங்கின.

அங்கே,கொக்கு போன்ற பூக்கள் விரிந்த தாழை மரத்தின் கிளைகள் மீது ஆயர்கள் இருந்தார்கள்.அவர்கள்,வண்டுகள் தேன் அருந்துமாறு மலர்ந்த நீலமணி போன்ற இதழ்கள் உடையக் குவளை மலரை,’முண்டகம்’ என்னும் முள்ளிப்பூ மாலையுடன் சூடியத் தங்கள் தலை முடியில்,நறுமணம் கமழ விரியும் தாமரையின் முழுமலரையும் அணிந்திருந்தார்கள்.

”வில் சின்னம் கொண்ட வில்லவனான நம் சேரன் வந்து விட்டார்.வட திசையிலிருந்து பல வகையான பசுக்களுடன் வருகிறார்.அவைகளுடன் நீங்களும் சேர்ந்துக் கொள்ளுங்கள்”,என்றுக் கூறி,தங்கள் காவலனான சேரன் செங்குட்டுவனுக்கு உரிய பசுக்களை நீர்த்துறைக்குச் செலுத்தி,ஆயர்கள் தம் குழலை ஊதி மகிழ்ந்தார்கள்.

குறிப்பு

 1. தண்-குளிர்ச்சி
 2. ஆடுநர்-நீர் ஆடுபவர்
 3. பரந்து-பரவி
 4. தோட்டு-இதழ்
 5. முண்டகம்-முள்ளி
 6. கோதை-பூ மாலை
 7. குஞ்சி-ஆண்மயிர்
 8. முருகுவிரி-மணம் பரவிய (முருகு-மணம்)
 9. தோய-படிய,பொருந்த
 10. குருகு-கொக்கு
 11. அலர்-விரிந்த
 12. கோட்டுமிசை-கிளைகள் மீது (கோட்டு-கிளை:மிசை-மீது)
 13. வியன்-அகன்ற
 14. வில்லவன்-வில் சின்னம் கொண்ட சேரர்
 15. பல்லான்-பல பசு (பல்-பல:ஆன்-பசு)
 16. நிறை-கூட்டம்
 17. படர்குவிர்-சேர்வீர்
 18. ஆன்நிரை-பசுக் கூட்டம் (ஆன்-பசு:நிறை-கூட்டம்)
 19. படீஇ-படியச் செய்து
 20. கோவலர்-இடையர்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>