வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

ndkநடுகற் காதை

1.வஞ்சி நகரில் மகிழ்ச்சி
ndk1
தண்மதி யன்ன தமனிய நெடுங்குடை
மண்ணக நிழற்செய மறவா ளேந்திய,
நிலந்தரு திருவின் நெடியோன் றனாது
வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர்,

ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய் 5
வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர்
உலக மன்னவன் வாழ்கென் றேத்திப்
பலர்தொழ வந்த மலரவிழ் மாலை

குளிரிந்த நிலவுப் போன்ற தங்கத்தால் செய்த தனது நெடுங்குடை இந்த உலக மக்கள் அனைவருக்கும் நிழல் தருமாறு,வீர வாளைக் கையில் ஏந்திவர் சேரன் செங்குட்டுவன்.நிலம் தருகின்ற செல்வமான விளைச்சல் பொருள்களால் வளம் பெற்று உயர்ந்தவனான செங்குட்டுவன் தனது வெற்றிச் சிறப்புடைய வஞ்சி எனும் பழைய நகருக்கு வந்து சேர்ந்தார்.

ஒளி வீசும் வளையல்கள் அணிந்த பரந்த கைகள் உடைய வஞ்சி நகரைச் சேர்ந்த பெண்கள்,பிரகாசமான மலர்களைத் தூவி,வெண்மையானத் திரி உடைய விளக்குகள் ஏந்தி,’உலகை ஆளும் மன்னன் வாழ்க!’,என்று வாழ்த்திப் போற்றினார்கள்.

இவ்வாறு பலரும் சேரன் செங்குட்டுவனைப் போற்றி வணங்கும் போது,மலர்கள் இதழ் விரியும் மாலைப் பொழுது வஞ்சியில் வந்தது.

குறிப்பு

 1. தண்-குளிர்ந்த
 2. அன்ன-போன்ற
 3. தமனியம்-தங்கம்
 4. மறவாள்-வெற்றி வாள் (மற(ம்)-வெற்றி)
 5. மண்ணகம்-நிலத்தில் (மண்+அகம்(உள்))
 6. திரு-செல்வம்
 7. நெடியோன்-உயர்ந்தவன்
 8. தனாது-தனது,தன்னுடைய
 9. வலம்படு -வெற்றி பெறுதல்(வலம்-வெற்றி)
 10. மூதூர்-பழைய ஊர்(மூ(மூப்பு)+ஊர்)
 11. ஒண்டொடி-ஒளி வீசும் வளையலை அணிந்த பெண்
  (ஒண்(பிரகாசம்)+தொடி(வளையல்))
 12. தடக்கை-பெரிய கை
 13. ஒண்-பிரகாசம்
 14. தூஉய்-தூவி
 15. வெண்டிரி(வெண்திரி)-வெண்மையான திரி (வெண்(வெண்மையான)+திரி)
 16. விளக்கம்-விளக்கு
 17. ஏத்தி-போற்றி
 18. அவிழ்-மலரும்

2.ஒற்றடம் கொடுத்தார்கள்

போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல்
வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர் 10

யானை வெண்கோடு அழுத்திய மார்பும்,
நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும்,
எய்கணை கிழித்த பகட்டெழில் அகலமும்,
வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்,

மைம்மல ருண்கண் மடந்தைய ரடங்காக் 15
கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ

போந்தை எனும் ஆண் பனம் பூவால் தொடுத்த பொன் பூமாலை சூடிய தங்கள் மன்னன் சேரன் செங்குட்டுவனின் கட்டளையைச் செய்து முடித்த,கையில் ஏந்திய வாளால் வெற்றிப் பெற்ற வீரர்களும் தங்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

இவர்களில் சிலர் மார்புகளில் யானைகளின் வெண்மையான கொம்பான தந்தங்கள் குத்திய புண்கள் இருந்தன.சிலரது மார்புகள் நீண்ட வேல் கிழித்த பெரிய புண்களுடன் விளங்கின.சிலரது மாணிக்கம் பூண்ட மார்புகளை பகைவர்களின் அம்புகள் துளைத்திருந்தது.சிலரது மார்புகளில்,கரிய வால் கிழித்த பெரிய புண்கள் இருந்தன.

புண்பட்ட அந்த மார்புகளை,கருங்குவளை மலர் போன்ற மை தீட்டிய கண்களையுடைய அவர்களின் காதலிகள்,கச்சுக்கு அடங்காத தங்கள் திரண்ட தொய்யில் எழுதிய மென்மையான மார்புகளால் வெப்பமான ஒற்றடம் கொடுப்பது போல ஒற்றி இறுகத் தழுவினார்கள்.

குறிப்பு

 1. போந்தை-ஆண் பனம்பூ
 2. கண்ணி-இரண்டிரண்டு பூக்களால் கோக்கப்பட்ட மாலை
 3. பொலம்-தங்கம்
 4. தெரியல்-மாலை
 5. வேந்து-மன்னன்
 6. வினை-செயல்
 7. ஏந்துவாள்-ஏந்திய வாள்
 8. வலத்தர்-வலது கை உடையவர்,வலிமை உடையர்வர்கள் (வலம்-வலிமை)
 9. வெண்கோடு-வெள்ளை கொம்பான தந்தம்
 10. ஆகம்-மார்பு
 11. எய்கணை-எய்த அம்பு (கணை-அம்பு)
 12. வைவாள்-கூர்மையான வாள் (வை-கூர்மை)
 13. மைம்மலர்-கருங்குவளை,நீலமலர்
 14. உண்கண்-மை உண்ட(தீட்டிய) கண்
 15. மடந்தையர்-பெண்கள்
 16. கொம்மை-மார்பு,திரட்சி
 17. வரிமுலை-வரிக்கோலம் கொண்ட மார்பு,தேமல் உடைய மார்பு
 18. வெம்மை-வெப்பம்
 19. வேது-ஒற்றடம்
 20. உறீஇ-உறுத்தி,அழுத்தி

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>