வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

ndkநடுகற் காதை

11.சோழர் பாண்டியர் கருத்து

ndk7

நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80
மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி,
வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின்,
கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது,
தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே,
செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு, 85
வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபத் திருக்க,வேந்தன்,
அமரகத் துடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று,தகையடி வணங்க,
நீளம ரழுவத்து நெடும்பே ராண்மையொடு 90
வாளுங் குடையும் மறக்களத் தொழித்துக்
கொல்லாக் கோலத் துயிருய்ந் தோரை
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்றெனத்
தலைத்தேர்த் தானைத் தலைவற் குரைத்தனன்,
சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை 95

ஆங்குநின் றகன்றபின் அறக்கோல் வேந்தே!
ஓங்குசீர் மதுரை மன்னவற் காண,
ஆரிய மன்னர் அமர்க்களத் தெடுத்த
சீரியல் வெண்குடைக் காம்புநனி சிறந்த
சயந்தன் வடிவில் தலைக்கோ லாங்குக் 100

கயந்தலை யானையிற் கவிகையிற் காட்டி,
இமயச் சிமையத் திருங்குயி லாலுவத்
துமையொரு பாகத் தொருவனை வணங்கி,
அமர்க்களம் அரசன தாகத் துறந்து,
தவப்பெருங் கோலங் கொண்டோர் தம்மேல் 105

கொதியழற் சீற்றங் கொண்டோன் கொற்றம்
புதுவ தென்றனன் போர்வேற் செழியனென்
றேனை மன்னர் இருவருங் கூறிய
நீண்மொழி யெல்லாம் நீலன் கூறத்

நீலனைத் தலைவனாகக் கொண்ட சட்டை அணிந்த மக்கள் திரும்பினார்கள்.அவர்களோடு,மாடல மறையவனும் வந்தான்.வாசலில் காவல் காப்பவர் மூலம் தம் வருகையை அவர்கள் செங்குட்டுவனுக்கு அறிவித்தார்கள்.

அரண்மனையில் வேலை செய்பவர்களின் மன்னனான செங்குட்டுவனின் சம்மதத்துடன்,அவர்களுடன் சென்று அவனை நீலன் வணங்கினான்.

“தும்பை சூடிய,உக்கிரமான போரில் சிறந்த,வீரக் கழல் அணிந்த மன்னனே!செம்பியனான சோழனின் பழமையான ஊருக்குச் சென்று சேர்ந்தோம்.அங்கு வச்சிர நாட்டுப் பந்தலும்,அவந்தி தேசத்தின் தோரணவாயிலும்,மகத நாட்டு மண்டபமும் ஒன்றாகச் சேர்த்து அமைக்கப்பட்ட சித்திர மண்டபத்தில் சோழன் இருந்தான்.

போர்க்களத்தில் தங்கள் நிலை அழிந்த ஆரிய மன்னர்களோடும்,அவர்களின் பரிவாரங்களோடும் சென்று,சோழனின் பெருமை வாய்ந்த திருவடிகளை நாங்கள் வணங்கினோம்.

பெரிய போர்க்களத்தில் மிகுந்த வீரத்தோடு,தங்கள் வாளையும்,வெண் கொற்றக் குடையையும் அந்தக் களத்தில் விட்டுவிட்டு,வீரர்கள் கொல்லத்துணியாத கோலமான தவக் கோலம் பூண்டு ஓடி உயிர் பிழைத்தவர் இவர்கள் என்று அவர்களைக் காட்டினோம் !’வெல்லும் போரில் இவர்களைக் கைப்பற்றி வருவது சிறந்த வெற்றி ஆகாது’,என்று,இந்திர வில்லைப் போன்ற அழகிய மாலையை மார்பில் அணிந்த,பண்புகளில் சிறந்த சோழன்,தனது சிறந்த தேரை உடைய படைத் தலைவர்களிடம்,நம்முடைய செயலைக் குறித்து நகையாடிக் கூறினான்.

அறம் தவறாது ஆட்சி புரியும் மன்னனே !அங்கிருந்தும் அகன்றோம்.உயர்ந்த சிறப்புடைய மதுரை மன்னனைக் காணச் சென்றோம்.

ஆரிய மன்னர்கள்,போர்க்களத்தில் உயர்த்திய சிறப்பான தன்மை உடைய வெண்கொற்றக் குடையின் காம்பை மிகச் சிறந்த சயந்தன் வடிவம் கொண்ட தலைக்கோலாக வைத்து,பெரிய தலை உடைய யானையின் மீதுள்ள குடையைக் காட்டி,’இமயத்தின் உச்சியில் உள்ள பெரிய குயிலாலுவம் என்னும் இடத்தில் உள்ள பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானை வணங்கிப்,போர்க்களம் உன் மன்னன் உடைதாகுமாறு விட்டுவிட்டு ஓடிப் போய் இவர்கள் பெரிய தவக் கோலம் கொண்டார்கள்.வீரமற்று ஓடி உயிர் பிழைத்த இவர்களின் மீது,கொதிக்கும் நெருப்பு போல கோபம் அடைந்து பிடித்து வந்த உன் அரசனின் வெற்றிச் சிறப்புத் தமிழக வரலாற்றில் இல்லாத புதுமை ஆகும்’,என்றான் போரில் வெற்றி பெரும் ஆற்றல் படைத்த செழியன்”,

என்று,சோழர் பாண்டிய ஆகிய இரு மன்னர்கள் கூறிய நீண்ட உரைகள் அனைத்தையும் ,நீலன் செங்குட்டுவனுக்கு எடுத்துக் கூறினான்.

குறிப்பு

தலைக்கோலை சயந்தனாக கருதுவது ஏன்?

jayanthan

இந்திரன் சபையில் ஆகத்தியரை கொளரவிக்கும் வண்ணம் ஊர்வசியை நடனமாட ஏற்பாடு செய்தனர்.அப்போது அவையில் நுழைந்த இந்திரன் மகன் சயந்தனுக்கும் ஊர்வசிக்கும் காதல் அரும்பியது.காதல் மயக்கத்தில் ஊர்வசியின் கால்கள் தாளத்தில் தடுமாறின,அதன் விளைவாய் நடனத்துக்கு ஏற்றவாறு இசைக்க யாழிசையும் தடுமாறுகிறது.இதனால் கோபம் கொண்ட அகத்தியர்,சயந்தனை பூமியில் மூங்கிலில் தலைக்கோலாக சாபமிடுகிறார்.அன்று முதல் சுர இசையும்,தாள இசையும் சமன் செய்து வழி நடத்தும் தலைக்கோலாக சயந்தன் கருதப்படுகிறான்.

 

 1. கஞ்சுகமாக்கள்-சட்டை அணிந்த மக்கள் (கஞ்சுகம்-சட்டை:மாக்கள்-மக்கள்)
 2. மறையோன்-பிராமணர்
 3. வாயிலாளர்-வாசலில் காவல் காப்பவர் (வாயில்-வாசல்)
 4. இசைத்த-அறிவித்த
 5. கோயில் மாக்கள்-அரண்மனையில் வேலை செய்பவர்கள் (கோயில்-அரண்மனை:மாக்கள்-மக்கள்)
 6. கொற்றவன்-மன்னன்
 7. வெம்-வெப்பம்
 8. சூழ்கழல்-கழல் அணிந்த
 9. செம்பியன்-சோழன்
 10. மூதூர்-பழமையான ஊர்
 11. புக்கு-புகுந்து
 12. குழீஇய-குழுமிய,கூடிய
 13. அமரகம்-போர்க்களம் (அமர்-போர்)
 14. தமர்-சுற்றத்தார்,பரிவாரம்
 15. தகையடி-மென்மையான அடி (தகை-அழகு,பெருமை,மேன்மை)
 16. நீள்-நீண்ட
 17. அமர்-போர்
 18. அழுவத்து-போர் களத்தில் (அழுவம்-போர்)
 19. மறக்களம்-வீரம் சூழ்ந்த போர்க்களம் (மறம்-வீரம்)
 20. வெல்போர்-வெல்லும் போர்
 21. கோடல்-கொள்ளுதல்
 22. கொற்றம்-வெற்றி
 23. வெற்றம்-வெற்றி
 24. தலை-தலைமை
 25. தேர்த் தானை-தேர் படை (தானை-படை)
 26. சிலை-வில்
 27. தார்-மாலை
 28. அகலம்-மார்பு
 29. பெருந்தகை-பண்புகளில் பெரிய மனிதர்
 30. அறக்கோல்-செங்கோல்
 31. ஓங்குசீர்-உயர்ந்த சிறப்பு (சீர்-சிறப்பு )
 32. அமர்க்களம்-போர்க்களம் (அமர்-போர்)
 33. சீர்இயல்-சிறப்பான இயல்பு (சீர்-சிறப்பு:இயல்-இயல்பு)
 34. நனி-மிகுதி
 35. தலைக்கோல்-நன்றாக நாட்டியப் பயிற்சி பெற்ற பெண்கள்,அரசு அவை அல்லது கோயிலில் அரங்கேற்றம் என்னும் ‘தலைக்கோல் அரங்கில்’ நடனம் புரிவர்.அப்போது அவர்களுக்கு ‘தலைக்கோல்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அவர்களை ‘தலைக்கோலி’ என்றும் அழைத்தனர்.
 36. கயந்தலை-பெரிய தலை (கயம்-பெரிய)
 37. கவிகை-குவிந்து நிற்கும் குடை
 38. சிமையம்-உச்சி
 39. உமை-பார்வதி
 40. கொதியழல்-கொதிக்கும் நெருப்பு (அழல்-நெருப்பு)
 41. சீற்றம்-கோபம்
 42. கொற்றம்-வெற்றி
 43. புதுவது-புதிது
 44. போர்வேற் செழியன்-வேல் படை உடைய செழியன்
 45. ஏனை-மற்ற
 46. நீண்மொழி-நீண்ட மொழி,அறிவுரை (நீண்-நீண்ட)

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>