வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

ndkநடுகற் காதை

14.நிலையாமை

ndk9

வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டிச் சென்றதற் பின்னும், 130
அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோ யாயினை!
வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப்
போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில்,
கடற்கடம் பெறிந்த காவல னாயினும், 135
விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும்,
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு,
மேல்நிலை யுலகம் விடுத்தோ னாயினும்,
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும், 140
வன்சொல் யவனர் வளநா டாண்டு,
பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும்,
மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி
அகப்பா எறிந்த அருந்திற லாயினும்
உருகெழு மரபின் அயிரை மண்ணி, 145
இருகடல் நீரும் ஆடினோ னாயினும்,
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து,
மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்,
மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்! 150
மல்லன்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில்
செல்வம் நில்லா தென்பதை வெல்போர்த்
தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை யல்லையோ காவல் வேந்தே!
இளமை நில்லா தென்பதை எடுத்தீங்கு 155
உணர்வுடை மாக்கள் உரைக்க வேண்டா
திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே!
நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை

“உலகத்தின் காவலை மேற்கொண்ட உனது நல்ல வாழ்நாட்களில்.ஐம்பது ஆண்டுகள் முடிந்து விட்டன.இதற்குப் பின்னும்,அறநூல்கள் கூறும் வேள்விகளைச் செய்யாமல்,எல்லா இடத்திலும் போர்க்கள வேள்வியையே செய்பவனாய் திகழ்கிறாய்!

மன்னர்களுக்கு உரிய செயல்களைச் செவ்வனே முடித்த,வெற்றி வாளை ஏந்தி,ஆண் பனம் பூ மாலை சூடிய முன்னோர்கள் இடையில்,கடலில் பகைவரின் கடம்பை வெட்டிய காவலன் என்றாலும்,

இமய மலையில் வில்லைப் பொறித்த சிறப்பு மிக்கவன் என்றாலும்,

நான்கு வேதங்களை அறிந்தவரான பாலைக்கௌதமனார் என்னும் புலவரின் செய்யுளை ஏற்று,அவரை மேல் உலகம் அனுப்பியவன் என்றாலும்,

‘நிலை பெற்ற உயிர்களை முறையாகக் கொள்வாய்’,என எமனை ஓர் எல்லைக்குள் உட்படுத்திய மன்னவன் என்றாலும்,

கடுமையான சொல்லுடைய யவனரின் வளமான நாட்டை ஆட்சி செய்து,பொன்னாக விளங்கும் நீண்ட மலையான இமய மலைக்குச் சென்றவன் என்றாலும்,

மிகப் பெரிய படையோடு பெரிய போரில் பகைவர்களை ஓட்டி, பகைவர் மதிலை அழித்த அரிய திறல் உடையவன் ஆயினும்,

அச்சம் கொள்வதற்குக் காரணமான பகைவனுடைய அயிரை மலைக்குச் சென்று நீராடி மேலும் இரு கடல் நீரில் நீராடிய அரசன் என்றாலும்,

சதுக்கப் பூதங்களை வஞ்சி நகரத்துக்குக் கொண்டுவந்து,மதுவை அருந்தும் யாகத்தைச் செய்தவன் ஆயினும்,

அவ்வாறு தங்கள் சிறந்த செயல்களால் மேலான புகழ் உடையவர்கள் ஆயினும்,அவர்கள் இப்போது இல்லை அல்லவா ?

அதனால் இந்த உலகில் உடல் நிலையற்றது என்பதை உணர்ந்தவனே !

வளம் நிறைந்த இந்தப் பெரிய உலகத்தில் வாழும் மக்களிடம்,செல்வம் நிலையாக இருக்காது என்பதை வெல்லும் போரில் அருள் நிறைந்த தமிழ் மன்னர்களை இகழ்ந்த ஆரிய மன்னர்களின் நிலைமை மூலம் நீ கண்டாய் அல்லவா காவல் காக்கும் மன்னனே?

இளமைப் பருவம் நிலையானது இல்லை என்பதை,இந்த உலகத்தில் உணர்வுடைய மக்களுக்கு எடுத்து உரைக்கவும் வேண்டுமா? திருமகள் தங்கிய பரந்த மார்பையும்,செங்கோலையும் உடைய மன்னனே! நரைத்த முடியையும், முதிர்ந்த உடலையும் நீ கண்டு அறிவாய்!”,

என வாழ்க்கையின் நிலையாமை குறித்து சேரன் செங்குட்டுவனிடம் எடுத்துரைத்தார் மாடலன்.

குறிப்பு

 1. வையம்-உலகம்
 2. ஐயைந்து இரட்டி- ஐம்பது (ஐயைந்து(5*5)=25 இரட்டி 25*2=50)
 3. மறக்களம்-போர்க் களம்
 4. வேந்து-அரசன்
 5. ஏந்துவாள்-வாளேந்திய
 6. வலத்தர்-வலிமை உடையவர்கள் (வலம்-வெற்றி)
 7. போந்தை-ஆண் பனம்பூ
 8. கண்ணி-பூ மாலை
 9. ஊங்கணோர்-முன்னோர்
 10. மருங்கில்-பக்கத்தில்
 11. விடர்ச்சிலை-மலை உச்சி
 12. விறலோன்-சிறப்பு மிகுந்தவன்
 13. நான்மறையாளன்-நான்மறையாளன்-நான்கு வேதங்களை அறிந்தவர்கள்
 14. மன்-நிலைபெற்ற
 15. கூற்றுவன்-எமன்
 16. வன்சொல்-கடுஞ்சொல்
 17. நெடுவரை-நீண்ட மலை (வரை-மலை)
 18. இருஞ்செரு-பெரிய போர் (இரும்-பெரிய :செரு-போர்)
 19. அகப்பா-மதில்
 20. அருந்திறல்-அரிய திறமையுடையவன்
 21. உருகெழு-அச்சம் பொருந்திய (உரு-அச்சம்:கெழு-பொருந்திய)
 22. மண்ணி-நீராடி
 23. மீக்கூற்றாளர்-மேலான சொல்லை கூறுபவர்கள்
 24. இன்மை-இல்லாமை
 25. யாக்கை-உடல்
 26. மல்லல்-வள்ளல்
 27. மா-பெரிய
 28. ஞாலம்-உலகம்
 29. வெல்போர்-வெல்லும் போர்
 30. தண்டமிழ்-குளிர்ச்சி தரும் தமிழ் (தண்-குளிர்ச்சி)
 31. திரு-திருமகள்
 32. ஞெமிர்-பரந்த
 33. மேனிலை உலகம்-மேல் உலகம்,சுவர்க்கம்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>