வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

ndkநடுகற் காதை

15.உயிரின் தன்மை
ndk10

விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் 160
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்
விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர்
கலங்கஞர் நரகரைக் காணினுங் காணும்

ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் 165
கூடிய கோலத் தொருங்குநின் றியலாது
செய்வினை வழித்தாய் உயிர்செலு மென்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்

எழுமுடி மார்பநீ யேந்திய திகிரி
வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே 170

அரும்பொருட் பரிசிலன் அல்லேன் யானும்
பெரும்பேர் யாக்கை பெற்ற நல்லுயிர்
மலர்தலை யுலகத் துயிர்போகு பொதுநெறி
புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன்

“தேவர்களின் வடிவத்தில் வான் உலகம் சென்ற நல்ல உயிர்கள்,மீண்டும் மக்கள் வடிவில் வந்து பிறந்தாலும் பிறக்கும்.

மனித உடலை எடுத்த உயிர்களில் பல,விலங்குகளின் உடலைப் பெற்றாலும் பெரும்,மேலானவனே!

விலங்கு உடலில் நின்று,பிரிந்த இனிய உயிர்,நடுங்கும் துன்பத்தை அனுபவிக்கும் நகரத்தில் வாழும் நரகரை காணக்கூடும்.

ஆடுகின்ற கூத்தரைப் போல,அரிய உயிரானது ஒரு இடத்தில் எடுத்த வடிவம் எப்பொழுதும் நிலையாக நின்று இயங்குவதில்லை.செய்த வினையின் பலனாகும்,உயிர்கள் வெவ்வேறு உடலில் சென்று பிறக்கும்.இதுவே பொய் அறிவு இல்லாத ஞானிகள் சொன்ன உண்மையானத் தத்துவமாகும்.

ஏழு மன்னர்களின் முடிகளைக் கொண்டு செய்த ஆரம் அணிந்த மார்பை உடையவனே !நீ ஏந்திய ஆணைச்சக்கரம் உன் வழிவழி வருபவர்களிடமும் நிலைத்துச் சிறக்கும்!

அரிதானப் பொருட்களைப் பரிசிலாகப் பெற உன்னை நாடி நான் வரவில்லை !மிகுந்த பெருமை உடைய உடலைப் பெற்ற நல்ல உயிர்,பரந்த இடத்தை உடைய இந்த உலகில்,மற்ற உயிர்கள் போவது போன்ற பொது வழியில் சென்று பாழாவதை,நான் பொறுக்க மாட்டேன்,அறிவின் எல்லையைக் கடந்தவனே!நான் கூறுவதையும் கேள் !”,

என்று செங்குட்டுவனிடம் கூறினார் மாடலன்.

குறிப்பு

 1. மறித்தல்-மீளல்
 2. யாக்கை-உடல்
 3. மிக்கோய்-மேலானவனே
 4. அஞர்-துன்பம்
 5. நரகர்-நரகத்தில் வாழ்பவர்கள்
 6. பொருளுரை-மெய்யுரை
 7. பொய்யில் காட்சி-ஐயந்திரிபில்லா அறிவு
 8. எழுமுடி-ஏழு முடி (எழு-ஏழு)
 9. திகிரி-ஆணைச் சக்கரம்
 10. வயவாள்-வலிமையான வாள் (வய-வலிமை)
 11. பொய்யில் காட்சியோர்-பொய் இல்லாத அறிவுடையவர்கள்
 12. அரும்பொருள்-பெறுவதற்கு அரிதான பொருள்
 13. மலர்தலை-அகன்ற இடம் (மலர்தல்-பரவுதல்)
 14. பேரியாக்கை-பெருமையுடைய உடல் (யாக்கை-உடல்)
 15. பொறேஎன்-பொறுக்க மாட்டேன்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>