சிலம்புச்செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.
சிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்
தன் எட்டு வயதில் சங்கரதாசர் சுவாமிகள் எழுதிய கோவலன் நாடகத்தில் குழந்தை கண்ணகியாக மேடை ஏறினார் ம.பொ.சி. இதுவே சிலப்பதிகாரத்துடன் சிலம்பு செல்வருக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு. பின்னாளில் ஆகஸ்ட் கிளர்ச்சி சமயம் அமராவதி சிறையில் ஓராண்டுகாலம் அடைக்கப்பட்டிருந்த போதுதான் ம.பொ.சிக்கு பாரதியின் எழுத்து மூலம் இளங்கோ அடிகளின் சிலப்பதிகார காவியத்தின் அறிமுகம் கிடைத்தது. இரெண்டாம் வகுப்பே படித்த ம.பொ.சி எந்த பேராசிரியர் உதவியும் இன்றி அரும்பதவுரை, அடியார்க்கு நள்ளாருரை ஆகியவற்றை கொண்டு சிறைச்சாலையில் கிடைத்த ஓய்வை பயன்படுத்தி சிலம்பை கற்க தொடங்கினார். படிக்கும் போதே சக அரசியல் கைதிகள் சிலருக்கு சிலப்பதிகார வகுப்பு நடத்தினார். சிலம்பின் மேல் கொண்ட ஈர்ப்பால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூட்டி மகிழ்ந்தார். ம.பொ.சி நடத்திய தமிழ் அரசு கழகத்தின் ஆறு கொள்கைகளில், நான்காவது கொள்கையாக இலக்கியக் கொள்கையை இடம் பெற செய்ததும் அவருக்கு சிலம்பின் மேல் இருந்த காதலே ஆகும். ஒரு நாள் ம.பொ.சி தன் மனைவி ராஜேஸ்வரியிடம் நான் சிறையில் இறந்திருந்தால் என்ன செய்திருப்பாய் என வினவினார். அதற்க்கு அவர் சற்றும் தாமதியாமல். ’கண்ணகி போன்று இந்த அரசை எதிர்த்து போரிட்டு நான் சிறைப்பட்டு செத்திருப்பேன்’ என்று முகத்தில் சினம் காட்டி பதில் அளித்தார். சிலம்பு செல்வர் சிலப்பதிகாரத்தின் கருப்பொருளை உணர்ந்தது மனைவியின் வீரவாசகம் மூலம்தான். கண்ணகியின் வரலாற்றை சொல்லியே தமிழ் பெண்களை தேச விடுதலை போரில் ஈடுபடுத்த முடியும்மென்ற நம்பிக்கை ம.பொ.சிக்கு பிறந்தது,சிலப்பதிகாரம் ஒரு அரசியல் காப்பியம் என அறிந்தார். இதற்க்கு பின்தான் ம.பொ.சி தமிழ்நாடு முழுவதும் சிலப்பதிகார பிரசாரத்தை மேற்கொண்டார். 1950 ல் சென்னை இராயபேட்டை காங்கிரஸ் திடலில் ம.பொ.சியின் முயற்சியால் தமிழ் வரலாற்றில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைப்பெற்றது. ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வைக்க, டாக்டர் மு.வரதராசனார் தலைமை வகித்தார். பெருந்தைலவர் காமராஜர் உட்பட அனைத்து கட்சி தமிழ் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டனர். ம.பொ.சி எதிர்பார்த்ததை போல சிலப்பதிகார விழா மாபெரும் சர்வ கட்சி தமிழ் கலாச்சார விழாவாக மாறியது. இதற்க்கு பின் ம.பொ.சி தன் தமிழரசு கழகம் மூலம் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் கொண்டாடினர். தான் எப்படியோ சிலம்பை படித்து புலமை பெற்று விட்டோம் என்றாலும் அவரை போல் பிறர் சங்கடப்படுவதை அவர் விரும்பவில்லை. சாமான்யர் படிக்கும் வண்ணம் சந்திப்பிரித்த சிலப்பதிகார நூல் தேவை என எண்ணினார். திரு.எஸ்.ராஜம் நடத்திய 'மர் ரே அண்டு கம்பெனி' இந்த பணியை செய்ய முன்வந்தது. 1957ல் தமிழ் அரசு கழகம் நடத்திய சிலப்பதிகார மாநாட்டில் சந்திப்பிரித்த சிலப்பதிகார முதல் பிரதி வெளியிடபட்டது. மலிவு பிரதிகளாக வந்த இந்தப் பதிப்புகள், இளங்கோ தந்த குரவைப் பாடல்களை இசையரங்களில் பாட உதவி புரிந்தனர். இதற்க்கு முன் இந்த வழக்கம் இருந்ததில்லை. சிலப்பதிகாரத்தை பல கோணல்களில் ஆராய்ந்து, பத்துக்கும் மேற்ப்பட்ட ஆராய்ச்சி நூல்களை எழுதினர் ம.பொ.சி. சிலப்பதிகார புகழ், எல்லா உலக மொழிகளுக்கும் பரவ வேண்டும் என கனவு கண்டார் ம.பொ.சி. இதன் முயற்சியாக கிருஷ்ணசுவாமி அசோசியேட்ஸ் மூலம் தொலைக்கட்சியில், இந்தி மொழியில் சிலப்பதிகாரம் தொடராக வெளிவர வித்திட்டார்.